அடிக்கடி ஆவி பிடிப்பதால் உங்கள் சருமத்திற்கு இத்தனை நன்மைகளா…!

சரும பராமரிப்பு என்பது பல படிநிலைகளை உள்ளடக்கி உள்ளது. சருமத்தில் உள்ள அழுக்குகள் மாசுக்கள் இல்லாமல் காப்பது, இறந்த செல்களை நீக்குவது, இளமையாக தோற்றம் அளிக்க செய்வது, சுருக்கங்கள் வராமல் தடுப்பது இப்படி பல்வேறு நோக்கங்களை உள்ளடக்கியதுதான் சரும பராமரிப்பு. சாதாரணமாக வீட்டில் ஆவி பிடிப்பதால் இத்தனை நோக்கங்களை நிறைவேற்ற முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆவி பிடித்தல் என்றதும் பலருக்கும் தொண்டை வலி, சளி, இருமல் இவற்றிற்கு சிறந்த தீர்வு என்றுதான் தோன்றும். ஆனால் ஆவி பிடிப்பதால் சருமத்திற்கும் அதிக அளவில் நன்மைகள் உண்டு. அதிகமான செலவுகள் இல்லாமல் ஆவி பிடித்தல் மூலமே நம்முடைய சருமத்திற்கு நாம் பல நன்மைகளை செய்ய முடியும். வாருங்கள் ஆவி பிடித்தால் உண்டாகும் நன்மைகளை பற்றி பார்க்கலாம்.

தொண்டை வலியால் அவதிப்படுகிறீர்களா??? இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்து பாருங்கள்…!

1. ஆவி பிடிக்கும் பொழுது சருமத்தில் உள்ள துளைகள் திறக்கிறது. மேலும் அதில் உள்ள அழுக்குகள் அனைத்தும் இளகி வெளியேறி விடுகிறது. மேலும் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளும் இளகி விடுவதால் அந்தக் கரும்புள்ளிகளை நீக்குவதற்கும் எளிதாக இருக்கிறது.

2. சூடான நீராவி முகத்தில் படும்படி ஆவி பிடிப்பதால் முகத்திலிருந்து வியர்வைகள் வெளியேறுவதுடன் ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. முகம் முழுவதும் ரத்த ஓட்டம் அதிகரித்து இயற்கையான பளபளப்பையும் சருமத்திற்கு தேவையான ஊட்டத்தை அளிக்கிறது.

3. சருமத்தில் உள்ள இறந்த செல்கள், பாக்டீரியாக்கள், முகப்பருக்களை உண்டாக்கும் காரணிகள் ஆகியவற்றை நீக்குகிறது.

4. நீராவி இயற்கையான முறையில் முகத்தை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகிறது. முகத்தை எப்பொழுதும் மாய்ச்சரைஸாக வைத்திருக்க அடிக்கடி நீராவி பிடித்தல் நல்லது.

5. நீராவி பிடித்தலுக்கு பிறகு சருமத்தில் ஊடுருவக் கூடிய தன்மை அதிகரிக்கிறது. இதனால் நீராவி பிடித்தலுக்கு பிறகு நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து சரும பராமரிப்பு முறைகளையும் உங்கள் சருமம் எளிதில் உட்கிரகித்துக் கொள்ள முடியும்.

6. நீராவி பிடித்தலுக்கு பிறகு முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் ஆகியவற்றின் உற்பத்தியும் அதிகரிக்கிறது. இதனால் முகம் இளமையாக தோற்றம் அளிக்கும்.

7. நீராவி பிடித்தல் சரும பராமரிப்பு மட்டுமின்றி மனதிற்கு இதம் அளிக்கக்கூடிய ஒன்றாகவும் இருக்கிறது. உங்களுக்கு பிடித்த நறுமணத் திரவியங்கள் அல்லது மூலிகைகள் ஏதாவது ஒன்றை அதில் சேர்த்து நீராவி பிடிக்கும் பொழுது அமைதியான உணர்வை பெறுவீர்கள்.

எளிமையான முறையில், அதிக செலவு இல்லாமல் உங்கள் சருமத்தை பராமரிக்க இது மிகச் சிறந்த வழியாகும். சைனஸ், தலைவலி, சளி, தொண்டை வலி போன்ற தொந்தரவுகளையும் நீக்க கூடிய இந்த ஆவி பிடித்தல் உங்கள் சருமம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் தீர்வு ஆகிறது என்றால் ஏன் இதை முயற்சிக்கக் கூடாது. எளிமையான இந்த முறையை முயற்சி செய்து உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள்.