அடர்த்தியான நீண்ட கூந்தலை பெற இந்த உணவுகளை அதிகம் சேர்த்துக்கோங்க!

அடர்த்தியான ஆரோக்கியமான நீண்ட பளபளப்பான கூந்தலை பெற வேண்டும் என்பதே பலரது ஆசையாக இருக்கிறது. அளவுக்கு அதிகமான முடி உதிர்வு என்பது இன்றைய காலகட்டத்தில் பலரும் சந்திக்க கூடிய மிக முக்கியமான பிரச்சனை. காரணம் நம்முடைய உணவுப் பழக்க வழக்கங்கள் தான். என்னதான் கூந்தலுக்காக சிறப்பாக தயாரித்த எண்ணெய், மாஸ்க் என்று செலவு செய்தாலும் அதைவிட முக்கியம் நாம் உண்ணும் உணவு. நாம் உண்ணுகின்ற உணவில் கூந்தல் வளர தேவையான சத்துக்கள் நிறைந்து இருந்தால் போதும் அழகான கூந்தலை பெற முடியும். இதோ கீழ்கண்ட உணவுகளை நீங்கள் தினமும் சேர்த்துக் கொள்ளுங்கள் நிச்சயம் ஆரோக்கியமான கூந்தலை பெறுவீர்கள்.

1. முட்டை:

முட்டை புரதச்சத்து நிறைந்த உணவாகும். இந்த முட்டை கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கிறது. மேலும் கூந்தலுக்கு வலிமை அளிக்கக்கூடிய ஒன்றாகவும் இருக்கிறது. பயோடின் போன்ற கூந்தலுக்கு முக்கியமான சத்துக்கள் நிறைந்தது. சிங்க், விட்டமின் இ, விட்டமின் சி என கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களையும் கொண்டுள்ளது.

2. கீரைகள்:

கீரையில் விட்டமின் சி, ஏ கரோட்டின், ஃபாலிட் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இரும்புச்சத்து நிறைந்ததாகவும் கீரை உள்ளது. உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய கீரை மிக முக்கியமான உணவு ஆகும். கீரையை அன்றாடம் உணவில் சேர்த்து வந்தால் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும்.

3. சிட்ரஸ் நிறைந்த பழங்கள்:

விட்டமின் சி சத்து நிறைந்த சிட்ரஸ் உள்ள பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை போன்ற உணவுகள் உடலில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். இதன் மூலம் கூந்தல் ஆரோக்கியமாகவும் வேகமாகவும் வளரும் வாய்ப்பு அதிகம். மேலும் விட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய்களை அதிகம் சேர்த்துக் கொண்டால் கூந்தல் வளர்ச்சி மிக வேகமாக அதிகரிக்கும்.

4. விதைகள் மற்றும் நட்ஸ்:

பாதாம், வால்நட், பூசணி விதை, ஃப்ளாக்ஸ் சீட் போன்ற விதைகள் மற்றும் நட்ஸ் கூந்தல் வளர்ச்சிக்கு மிகச் சிறந்த உணவுகள். இவற்றில் அதிக அளவு ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்து இருப்பதால் இது கூந்தல் வளர்ச்சிக்கு மட்டுமின்றி அடர்த்தியான கூந்தலுக்கும் வழிவகை செய்கிறது. மேலும் இந்த உணவுப் பொருட்களில் சிங்க் நிறைந்தும் காணப்படுகிறது. அடர்த்தியான கூந்தலுக்கு இது போன்ற பொருட்களை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

5. கேரட்:

கேரட் வைட்டமின் ஏ நிறைந்த ஒரு உணவு பொருள் ஆகும். இந்த வைட்டமின் ஏ கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்து. மேலும் கூந்தலின் வேர்க்கால்களில் சீபம் உற்பத்தியை இது அதிகரிக்க செய்கிறது. மேலும் இளநரை வராமல் காத்திடவும் இது உதவி புரிகிறது.

6. தானியங்கள்:

தானிய வகைகளில் பயோடின், இரும்புச்சத்து, சிங்க் மற்றும் விட்டமின் பி நிறைந்துள்ளது. பயோட்டின் கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதுடன் அது அடர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கச் செய்ய அதிக அளவு உதவி புரிகிறது.

இவை தவிர சோயா பீன்ஸ் போன்ற உணவுகளும் கூந்தல் வளர்ச்சிக்கு உதவக்கூடியன. வாய்ப்பு கிடைத்தால் அடிக்கடி அவகேடோவையும் நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மேலே குறிப்பிட்ட உணவுகளை வாரம் மூன்று அல்லது நான்கு முறை தவறாமல் சேர்த்து வாருங்கள் நிச்சயம் உங்கள் கூந்தலில் நல்ல மாற்றத்தை உணருவீர்கள்.