பிறந்த குழந்தையை சூரிய ஒளியில் காட்டுவதால் இத்தனை நன்மைகளா?

குழந்தை பிறந்து இந்த உலகிற்கு வந்ததும் அந்த குழந்தையை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பல்வேறு அறிவுரைகளை எடுத்துரைப்பார்கள். அது முக்கியமானதொரு விஷயம் தான் தினமும் காலை நேர சூரிய ஒளியில் குழந்தையை காட்ட வேண்டும் என்பது. மருத்துவர்களும் வீட்டில் உள்ள பெரியவர்களும் காலம் காலமாக குழந்தையை காலை நேர சூரிய ஒளியில் காட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வருவதற்கு காரணம் அதனால் விளையும் நன்மைகள் தான்.

குழந்தையின் மிருதுவான சருமத்தை வெயிலில் காட்ட வேண்டுமா? சூரியனின் புற ஊதாக்கதிர்கள் குழந்தைகளை தாக்குமா? வெயிலில் காட்டுவதால் என்ன நன்மை கிடைத்து விடப் போகிறது? என்று உங்களுக்கு இதில் பல்வேறு சந்தேகங்கள் ஏற்படலாம். இதோ உங்களுக்கான விளக்கம் தான் இது. பிறந்த குழந்தையை காலை நேர சூரிய ஒளியில் காட்டுவதில் உள்ள ஏராளமான நன்மைகளைப் பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.

பிறந்த குழந்தைகளின் துணிகளை துவைக்கும் பொழுது இதையெல்லாம் கவனிக்க தவறி விடாதீர்கள்!

1. வைட்டமின் டி:

வைட்டமின் டி கிடைக்க கூடிய மிக முக்கியமான மூலம் சூரிய ஒளி தான். இந்த வைட்டமின் டி தான் குழந்தைகளின் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. குழந்தைகளின் எலும்புகள் எளிதில் கால்சியத்தை உட்கிரகிக்க இந்த வைட்டமின் டி உதவுகிறது. இதனால் குழந்தைகளுக்கு ரிக்கெட் போன்ற நோய்கள் வராமல் காக்கிறது. மேலும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்களிலிருந்து காத்திடவும் உதவுகிறது.

2. செரோடோனின் உற்பத்தியை அதிகரித்தல்:

சூரிய ஒளி குழந்தைகளின் உடலில் படுவதன் மூலம் செரோடோனின் உற்பத்தி அதிகரிக்கிறது. இந்த செரோடோனின் ஹேப்பி ஹார்மோன் என்று அழைக்கப்படுகிறது. அதாவது குழந்தைகளுக்கு மகிழ்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆகிய உணர்வுகளை தரக்கூடிய ஹார்மோன் ஆகும். மேலும் இதனால் குழந்தைகள் நிம்மதியான உறக்கத்தை பெறவும் அவர்களின் செரிமான சக்தியை அதிகரிக்கவும் முடியும்.

3. இன்சுலின் அளவை மேம்படுத்த உதவுகிறது:

சிறிய வயதிலேயே குழந்தைகளை இவ்வாறு சூரிய வெளிச்சத்தில் காட்டுவதால் அவர்கள் டயாபட்டிக்ஸ் போன்ற நோய்கள் வராமல் காக்கப்படுவதாக கூறப்படுகிறது. சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் விட்டமின் டி இன்சுலின் சுரப்பை அதிகரித்திட உதவி புரிகிறது.

4. மஞ்சள் காமாலை மற்றும் தோல் மஞ்சள் நிறம் ஆவதை தடுத்தல்:

பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை வராமல் தடுக்க இது உதவுகிறது. பிலிரூபினை தடுத்து குழந்தைகளின் சருமம் மஞ்சள் நிறம் ஆவதை தடுக்கிறது. இதனால் குடல் சீராக இயங்க உதவி புரிகிறது.

5. ஆற்றல் அதிகரிக்கும்:

குழந்தைகளின் உடலில் மெலோடோனின் மற்றும் செரோடோனின் உற்பத்தி அதிகரிப்பதால் குழந்தைகள் உறங்கும் நேரம் சீராகிறது. குழந்தைகள் உற்சாகத்துடன் செயல்படவும் முடிகிறது இதனால் குழந்தைகளின் ஆற்றல் அதிகரிக்கிறது.