பளபளப்பான கூந்தலுக்கு இனி கண்டிஷனர் தேவையில்லை… இந்தப் பொருட்கள் மட்டும் இருந்தால் போதும்…!

கூந்தலுக்கான எண்ணெய் மற்றும் ஷாம்பு விளம்பரங்களில் பளபளப்பான மற்றும் மின்னும் கூந்தலை பார்க்கும் பொழுது நமக்கும் அது போன்ற கூந்தல் வேண்டும் என்று பலரும் நினைத்திருப்போம். விளம்பரங்களுக்காக பிரத்தியேக ஒளி மற்றும் எடிட்டிங் மூலம் அது போன்ற கூந்தலை நமக்கு காண்பித்து இருப்பார்கள். ஆனால் நிஜத்திலேயே அதுபோன்ற கூந்தல் வேண்டும் என்றால் அதற்கு முறையான பராமரிப்பு அவசியம். கடைகளில் விற்கும் கண்டிஷனர்களை விட இதுபோன்று இயற்கையான பொருட்களினால் நீங்கள் உங்கள் கூந்தலை பளபளக்கச் செய்வதுடன் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க முடியும். வாருங்கள் வீட்டில் உள்ள பொருட்கள் வைத்து கூந்தலை பளபளப்பாக ஆரோக்கியமாக எப்படி வைத்திருக்கலாம் என்பதை பார்க்கலாம்.

1. தேன் மற்றும் ஆலிவ் ஆயில்:

 • ஒரு சிறிய கிண்ணத்தில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு தேனை எடுத்துக் கொள்ளவும்.
 • இதனுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு ஆலிவ் ஆயில் சேர்க்க வேண்டும்.
 • இவை இரண்டையும் நன்றாக கலந்து விட வேண்டும்.
 • இரண்டும் நன்றாக கலந்த பிறகு முடியை பகுதிகளாக பிரித்து இதனை கூந்தலில் தடவி விட வேண்டும்.
 • 30 நிமிடங்கள் இதை அப்படியே வைத்து விடவும்.
 • 30 நிமிடங்களுக்குப் பிறகு சல்பேட் இல்லாத ஷாம்புவைக் கொண்டு கூந்தலை அலச வேண்டும்.
 • மாதத்திற்கு ஒருமுறை எவ்வாறு செய்தால் கூந்தல் நல்ல பளபளப்பை பெற முடியும்.

2. முட்டை மற்றும் ஆலிவ் ஆயில்:

 • இரண்டு முட்டையின் மஞ்சள் கருவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
 • இதனுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் அளவு ஆலிவ் ஆயில் சேர்க்க வேண்டும்.
 • இரண்டும் கலந்து நல்ல பேஸ்ட் போல வரும் வரை அடித்துக் கொள்ள வேண்டும்.
 • சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
 • முடியை பகுதிகளாக பிரித்து கலந்து வைத்த முட்டை மற்றும் எண்ணெய் கலவையை முடியின் அடிப்பகுதியில் இருந்து நுனிப்பகுதி வரை தடவி விட வேண்டும்.
 • இதனை ஒரு மணி நேரம் அப்படியே வைத்திருந்து சல்பேட் அல்லாத ஷாம்பு கொண்டு அலசவும்.
 • வாரம் ஒரு முறை இது போன்ற பேக் தடவி குளிர்ந்த நீரில் கூந்தலை அலசி வந்தால் நல்ல மாற்றத்தை பார்க்கலாம்.

3. தேங்காய் எண்ணெய்:

 • 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும்.
 • ஒரு அகலமான பாத்திரத்தில் வெந்நீர் காய வைத்துக் கொள்ளவும்.
 • அதனுள் தேங்காய் எண்ணெய் உள்ள கிண்ணத்தை வைத்து தேங்காய் எண்ணெயை சூடு செய்து கொள்ளவும்.
 • சூடு செய்த தேங்காய் எண்ணெயைக் கொண்டு தலையில் நன்றாக மசாஜ் செய்து கொள்ள வேண்டும்.
 • ஒரு தேங்காய் பூ துண்டை சூடான தண்ணீரில் நனைத்து தண்ணீரை முழுவதுமாக பிழிந்து விட்டு அந்தத் துண்டை தலையில் சுற்றி கட்டிக் கொள்ளவும்.
 • 45 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு ஷாம்பு கொண்டு அலசி விடலாம்.
 • வாரம் இரு முறை இதுபோன்று செய்து வந்தால் கூந்தல் நல்ல பளபளப்பை பெறும்.

4. வாழைப்பழம்:

 • ஒரு பழுத்த வாழைப்பழத்தை மசித்து எடுத்துக் கொள்ளவும்.
 • இதனுடன் இரண்டு மேசை கரண்டி அளவிற்கு ஆலிவ் ஆயில் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ளவும்.
 • முடியை பகுதியாகப் பிரித்து இதனை அடியிலிருந்து நுனிவரை நன்றாக தடவி விட வேண்டும்.
 • இதனை அப்படியே ஒரு மணி நேரம் வைத்திருந்து சல்பர் இல்லாத ஷாம்பு கொண்டு அலசி விடலாம்.
 • வாரம் ஒரு முறை இவ்வாறு வாழைப்பழ பேக் தலையில் தடவி குளிர்ந்த நீரில் கூந்தலை அலசி வந்தால் கூந்தல் நல்ல பளபளப்பாக இருக்கும்.