இனி பார்லர் பக்கம் போகவே வேண்டாம்… வீட்டிலேயே செய்ய பக்கவான பேசியல்..!

கோடைக்காலம் வந்துவிட்டால் பலரது கவலையும் சருமம் குறித்ததாக தான் இருக்கும். வியர்வை, வேர்க்குரு, சூரிய ஒளியால் சருமம் பாதிப்படைதல், கருமை அடைதல் என பல்வேறு பிரச்சனைகளை சருமம் சந்திக்க நேரிடும். இதற்காக பலரும் அழகு நிலையங்களையும், அழகு சிகிச்சை நிபுணரையும் நாடி செல்வார்கள். ஆனால் அதற்கான நேரமும் சூழ்நிலையும் இல்லாதவர்கள் கவலைப்பட வேண்டாம்.

உங்கள் சருமத்தில் படிந்துள்ள அழுக்கு, மாசுக்கள் இறந்த செல்கள் ஆகியவற்றை நீக்கி உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும், புத்துணர்ச்சியாகவும் வைக்க நீங்கள் அழகு நிலையங்கள் தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டில் உங்களிடம் இருக்கக்கூடிய எளிமையான பொருட்களை வைத்து உங்கள் சருமத்தை பராமரிக்க முடியும். வாருங்கள் அது என்னென்ன எப்படி பராமரிக்கலாம் என்பதை பார்ப்போம்.

1. கிளன்சிங்:

சருமத்தை பராமரிப்பு செய்வதன் முதல் நிலை கிளன்சிங் ஆகும். அதாவது முகத்தை சுத்தமாக எந்தவித மாசுக்களும் இல்லாமல் கழுவுதல். முகத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கு, நீங்கள் ஏற்கனவே அணிந்திருந்த மேக்கப் படிமம் என அனைத்தையும் சுத்தமாக நீக்கும்படி கிளன்சிங் செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.

இதற்காக நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய பொருள் பால் தான். காய்ச்சாத பாலை இரண்டு ஸ்பூன் ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய பஞ்சை இதில் நனைத்து உங்கள் முகம் முழுவதும் நன்கு தேய்த்து எடுங்கள். முகத்தின் அனைத்து பகுதிகளிலும் படும்படி தேய்த்து எடுத்த பிறகு இரண்டு நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு அதன் பிறகு துடைத்து எடுத்து விடுங்கள்.

இந்த முதல் நிலையிலேயே உங்கள் சருமம் ஓரளவு பளிச்சென்று ஆகியிருப்பதை நீங்கள் உணரலாம். இந்த பாலை தேய்க்கும் பொழுது உதடுகளின் ஓரங்கள், நாசிப் பகுதியில் ஓரங்கள் ஆகியவற்றில் நன்றாக கவனம் கொடுத்து தடவவும்.

2. எக்ஸ்போலியட்:

சருமத்தை ஸ்கிரப் செய்வது அதாவது எக்ஸ்போலியட் செய்வது மிகவும் அவசியம். இதை அடிக்கடி செய்ய வேண்டிய தேவை இல்லை. ஆனால் வாரம் ஒரு முறையாவது கண்டிப்பாக உங்கள் சருமத்தை எக்ஸ்போலியட் செய்ய வேண்டும். இதுதான் உங்கள் சருமத்தின் இறந்த செல்களை நீக்கி உங்கள் சருமத்தில் உள்ள துவாரங்களை சுவாசிக்கச் செய்ய உதவுகிறது.

இதற்காக நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய பொருள் சர்க்கரை மற்றும் தக்காளி. ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் அளவு வெள்ளை சர்க்கரை எடுத்துக் கொள்ளவும். பாதி அளவு தக்காளியை நறுக்கி சர்க்கரையை தொட்டு உங்கள் முகம் முழுவதும் வட்ட வடிவில் தேய்த்து விடவும். அதிக அழுத்தம் கொடுத்து தேய்க்காமல் மென்மையாக தேய்க்கவும்.

முகம் முழுவதும் நன்றாக தேய்த்த பிறகு சில நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து முகத்தை தண்ணீரில் கழுவி விடலாம். இப்பொழுது முகம் முழுவதும் நன்றாக எக்ஸ்போலியேட் செய்யப்பட்டு இருக்கும்.

3. ஃபேஸ் பேக் :

முகத்தை எக்ஸ்போலியட் செய்த பிறகு அப்படியே விட்டுவிடக்கூடாது. சருமத்திற்கு பேஸ் பேக் போட வேண்டியது மிகவும் அவசியம். அப்பொழுதுதான் சருமத்தில் உள்ள துளைகள் இறுக்கம் அடையும். முகம் தொய்வு பெறாமல் இளமையாக தோற்றமளிக்க செய்யும் படியான ஃபேஸ் பேக் போட வேண்டும்.

இதற்காக ஒரு சிறிய பௌலில் இரண்டு ஸ்பூன் அளவு கடலை மாவு, அரை ஸ்பூன் மஞ்சள் பொடி, சிறிதளவு தயிர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இதனை ஒரு நல்ல பேக் போல கலந்து முகத்தில் தடவி விடவும். 80லிருந்து 90% காயும் வரை இதை முகத்தில் வைத்திருக்கவும். அதன் பிறகு இதனை மென்மையாக கழுவி எடுத்துவிடலாம்.

இந்த பேக் போடுவதால் முகம் பளபளப்பு அடைவதோடு சூரிய ஒளியால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும். மேலும் சருமம் இறுக்கம் அடையும் இளமையாக காட்சி அளிக்கும். இந்த பேக்கிற்கு பதிலாக உங்கள் சருமத்திற்கு ஏற்றபடி பாசிப்பயறு மாவு, ரோஸ் வாட்டர் என விருப்பமான பேக் கூட பயன்படுத்தலாம்.