காலை எழும் பொழுதே சோர்வாக இருப்பது போல் உணர்கிறீர்களா? அப்போ இதை செய்யுங்க!

ஒவ்வொருவரும் அன்றைய காலை பொழுதை புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாகவும் தொடங்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். ஆனால் ஒரு சிலருக்கு இரவு தூங்கி காலையில் எழும் பொழுதே சோர்வாக இருப்பது போல் தோன்றும். அந்த நாளை எப்படி தொடங்குவது? என்ன செய்வது? என்று புரியாமல் விழிப்பார்கள். உங்களுக்கும் இது போல தோன்றுகிறதா? அப்படி என்றால் இவற்றை முயற்சி செய்து பாருங்கள்.

1. உங்கள் தூக்க நேரம் போதுமானதாக இருக்கிறதா என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாக ஆறு மணி நேரம் தூங்க வேண்டும், 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்று கூறினாலும் உங்கள் உடலுக்கு எவ்வளவு தூக்கம் வேண்டும் என்பதை நீங்கள் கண்டறிந்து கொள்ளுதல் நல்லது.

2. தூங்கி எழுந்த உடனேயே குளிர்ந்த நீரால் உங்கள் முகத்தை நன்கு அடித்து கழுவுங்கள். தண்ணீரால் முகத்தை அடித்து கழுவும் பொழுது தூக்க கலக்கம் குறைந்து ஓரளவு சுறுசுறுப்பாக உணர்வீர்கள்.

3. உங்கள் உடல் போதுமான அளவு நீரேற்றத்துடன் இல்லை என்றாலும் உங்களுக்கு உடல் சோர்வு ஏற்படலாம். காலை எழுந்ததும் ஒரு டம்ளர் அளவு தண்ணீரை பருகுங்கள். உடலை முடிந்த அளவு நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ளுங்கள்.

4. ஒரு முறை மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு தங்களுக்கு அனிமியா போன்ற பிரச்சனைகள் ஏதும் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

5. காலை கண்விழித்தவுடன் நீண்ட நேரம் ஒரே இடத்தில் இல்லாமல் வெளியில் சென்று காற்றோட்டமாக நடைப்பயிற்சி, உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபடுங்கள். அது நிச்சயம் உங்களை அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவும்.

6. காலை உணவை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள். காலையில் ஆரோக்கியமான சரிவிகித உணவை எடுத்துக் கொள்ளுங்கள். கூடுமானவரை வெள்ளை சர்க்கரையை தவிர்த்து விடுங்கள். மதிய உணவு வரையிலாவது வெள்ளை சர்க்கரை இல்லாதவாறு உணவு எடுத்துக் கொள்ளுங்கள்.

7. ஒரே மாதிரியான வேலை அல்லது வேலையில் ஏற்படக்கூடிய மன அழுத்தம் ஆகியவற்றால் கூட உங்களுக்கு காலை நேரத்தில் சோர்வு ஏற்படலாம். உங்கள் வேலையில் புத்துணர்வு அளிக்கக்கூடிய வகையில் உங்களுக்கு பிடித்தமான சில மாற்றங்களை செய்து பாருங்கள்.