வெயில் காலத்தில் தப்பி தவறி கூட இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்!

கோடை காலம் தொடங்கி விட்டது…! வெயிலை இப்பொழுதே சமாளிக்க முடியாத அளவுக்கு இருக்கிறது. இந்தக் கோடை காலத்தில் நாம் மிக கவனமாக இருக்க வேண்டியது உணவு விஷயத்தில் தான். கோடை காலத்தில் உடலை சமநிலையில் வைத்திருக்கவும் தேவையில்லாத நோய்களிலிருந்து காத்துக் கொள்ளவும் உணவில் மிக கவனமாக இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக சில உணவுகளை எந்த காரணம் கொண்டும் சாப்பிட வேண்டாம். வாருங்கள் அவை என்னென்ன உணவுகள் என்று பார்க்கலாம்.

1. காபி:

உங்கள் காலை பொழுதை காபியுடன் தொடங்குபவரா நீங்கள். அப்படி என்றால் கோடை காலத்தில் மட்டும் காபியை பருக வேண்டாம். அல்லது பெருமளவு குறைத்து விடுங்கள். காரணம் காபி அதிகம் பருகினால் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க முடியாது. எனவே காபிக்கு பதிலாக நீரேற்றம் தரக்கூடிய பானம் பருகங்கள்.

2. ஊறுகாய்:

கோடைக்கு ஏற்ற தயிர் சாதத்துடன் ஊறுகாய் வைத்து சாப்பிட பிடிக்குமா? ஆனால் இந்த ஊறுகாய் கோடை காலத்திற்கு ஏற்ற உணவு அல்ல. ஊறுகாய் போன்ற நீண்ட நாட்களாக வைத்து பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை உண்ண வேண்டாம். மேலும் இதில் உள்ள சோடியம் உடலை டிஹைட்ரேட் செய்துவிடும். மேலும் செரிமான பிரச்சனையையும் உண்டு பண்ணும்.

3. உலர் பழங்கள் மற்றும் விதைகள்:

உலர் பழங்களில் உடலுக்கு தேவையான பலவகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் இந்த உலர் பழங்கள் உடல் சூட்டை அதிகரிக்கச் செய்யக்கூடியன. இதனால் உடல் எரிச்சல் மற்றும் சோர்வு போன்றவை ஏற்படலாம். இதற்கு பதிலாக பழங்களாக வாங்கி சாப்பிடுவது நல்லது.

4. மில்க் ஷேக்:

வெயிலுக்கு குளுகுளுவென மில்க் ஷேக், ஐஸ்கிரீம் போன்றவை சாப்பிடலாம் என்று தான் தோன்றும். ஆனால் இந்த மில்க் ஷேக் அதிக அளவு வெள்ளை சர்க்கரை சேர்த்து செய்யப்படக்கூடிய ஒரு பானம். இதனால் உடலுக்கு எந்த விதமான நன்மையும் கிடையாது. ஆனால் அதற்கு பதிலாக உடலில் உள்ள நீர் சத்துக்களை நீக்கிவிடும். எனவே இது போன்ற பானங்களை தவிர்த்து விடலாம்.

5. காரமான உணவுகள்:

மிளகாயில் இருக்கக்கூடிய கேப்சைட் எனும் மூலக்கூறு உடலில் பித்த தோஷத்தை உண்டாக்கும். இது உடல் சூட்டை அதிகரிக்க செய்யும். எனவேதான் காரசாரமாக உணவு உண்ணும் பொழுது அதிக அளவு வியர்க்கிறது. மேலும் நீர் சத்து குறைபாடு , உடல் சோர்வு, உடல் உபாதைகள் ஏற்படலாம்.

6. கிரில் செய்யப்பட்ட இறைச்சி:

ஏற்கனவே வெப்பம் மிகுதியாக இருக்கும் பொழுது கிரில் செய்யப்பட்ட இறைச்சி எதையுமே உண்ண வேண்டாம். இது உடல் சூட்டை அதிகரிக்கச் செய்யும். மேலும் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய ஆபத்துக்களும் இதில் இருக்கிறது.

7. எண்ணெயில் பொறித்த உணவுகள்:

வடை, பஜ்ஜி, சமோசா போன்ற உணவு பண்டங்களின் பிரியரா நீங்கள்? தயவு செய்து இவற்றை கோடை காலத்தில் தவிர்த்து விடுங்கள். இதுபோன்ற எண்ணெயில் பொரித்து எடுத்த உணவுகள் செரிமான பிரச்சனையை உண்டு செய்யும். நீர்ச்சத்து வெகுவாக குறையும்.

8. சோடா :

சாப்பிட்ட உணவு சரியாக செரிக்காமல் இருக்கும் பொழுதோ நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனை இருக்கும் பொழுது பலரும் நாடுவது சோடாவைதான். ஆனால் இந்த சோடாவில் சர்க்கரை மற்றும் பல உடல் நலத்திற்கு தீங்கு தரக்கூடிய பொருட்கள் சேர்த்து செய்யப்படுகிறது. எனவே இது போன்ற சோடாக்களை தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.

9. ஆல்கஹால்:

ஆல்கஹால் உடலில் நீரேற்றத்தை குறைக்கும் இதன் விளைவாக தலைவலி, வாய் வறட்சி அடைந்தது போல் தோன்றுதல், மற்றும் உடல் சூடு ஆகிய பிரச்சனைகள் உண்டாகும். எனவே கோடை காலத்தில் ஆல்கஹாலை தவிர்த்தல் நலம்.

10. உப்பு:

கோடைகாலத்தில் உணவுகளில் அதிகம் உப்பு சேர்த்துக் கொள்வதை குறைத்துக் கொள்ளுங்கள். அதேபோல் கருவாடு, உப்புக் கண்டம் போன்ற அதிக அளவு உப்பு சேர்க்கப்பட்ட உணவுகள் உடலில் உள்ள நீர் சத்துக்கள் முழுவதையும் உறிஞ்சி எடுத்து விடும். இதனால் உடல் சோர்வு அதிகரிக்கும். எனவே கூடுதலாக உப்பு சேர்த்து உண்ணும் உணவுகள் எதையுமே உண்ண வேண்டாம்.