குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதே அனைத்து பெற்றோர்களின் விருப்பமாக இருக்கும். எந்தவிதமான நோய்க்கும் உள்ளாகாமல் குழந்தைகள் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்க குழந்தைகளுக்கு மிக முக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தி அவசியம். சில குழந்தைகள் அடிக்கடி தொற்றுக்கு உள்ளாவது, சளி காய்ச்சல் போன்ற நோய்களுக்கு அடிக்கடி ஆளாவது பார்த்திருப்போம். இதற்கு காரணம் அவர்களிடம் போதுமான அளவு நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் இருப்பது தான். குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தியை எவ்வாறு அதிகரிப்பது என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.
1. ஆரோக்கியமான உணவு முறை :
குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்களை பின்பற்றுங்கள். ரத்தத்தில் வெள்ளை அணுக்களை அதிகரித்து எதிர்ப்பு சக்தியை வளர்த்திட மிகச் சிறந்த வழி ஆரோக்கியமான உணவு தான். அதிகமான பழங்கள் மற்றும் காய்கறிகளை தினமும் உண்ண வேண்டும். குறிப்பாக அவர்கள் உணவில் காய்கறிகள் அதிகமாகவும் சிற்றுண்டி நேரத்தில் பழங்கள் அதிகமாகவும் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு பழங்கள் மற்றும் காய்கறிகள் குறைந்தது ஐந்தாவது குழந்தைகள் சாப்பிட்டிருக்க வேண்டும் என்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
அதேபோல் தானிய வகைகளும் உணவில் அதிகம் இடம் பிடிக்க வேண்டும். அனைத்து தானிய வகைகளும் தாராளமாக சாப்பிடலாம். புரதச்சத்து நிறைந்த முட்டை, இறைச்சி, மீன் போன்ற உணவுகளும் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் களையும் நொறுக்கு தீனிகளுக்கு பதிலாக சாப்பிட பழக்குங்கள்.
2. நல்ல உடல் இயக்கம்:
நடைப்பயிற்சி, சைக்கிளிங், உடற்பயிற்சி, நீச்சல் , விளையாட்டு என ஏதாவது ஒரு உடல் இயக்கம் குழந்தைகளுக்கு இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். குழந்தைகள் எப்பொழுதும் நல்ல உடல் இயக்கத்தோடு சுறுசுறுப்பாக இருத்தல் அவசியம். தினமும் காலை அல்லது மாலை வேளையில் உடற்பயிற்சி செய்வதை பழக்கப்படுத்துங்கள். இந்த உடல் இயக்கம் குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி மட்டுமில்லாமல் நல்ல தூக்கம் மற்றும் எலும்புகள் வலுப்பெறவும் உதவி புரிகிறது.
3. ஆழ்ந்த தூக்கம்:
குழந்தைகளுக்கு நல்ல தூக்கம் மிகவும் அவசியம். தூக்கத்திற்கும் எதிர்ப்பு சக்திக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. குழந்தைகள் ஆழ்ந்து தூங்கும் பொழுது தான் அவர்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இது சளி, காய்ச்சல் போன்றவற்றை எதிர்த்து போராடும் ஆற்றலை அவர்களுக்கு அளிக்கும். குழந்தைகளுக்கான தூங்கும் நேரத்தை முறைப்படுத்தி அந்த நேரத்திற்குள் அவர்களை தூங்க வைக்க பழக்கப்படுத்துங்கள். இரண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தை என்றால் 11ல் இருந்து 14 மணிநேர தூக்கம் அவசியம்.
4. தொற்று ஏற்படாமல் இருக்க:
குழந்தைகள் உள்ள வீட்டில் இருப்பவர்கள் ஏதேனும் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்கள் குழந்தைகளை விட்டு சற்று விலகி இருங்கள். இருமல் மற்றும் தும்மல் பொழுது குழந்தைகள் அருகில் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் கைகளை அடிக்கடி சோப்பினை கொண்டு சுத்தம் செய்யுங்கள். கதவின் கைப்பிடி, டிவி ரிமோட் என நீங்கள் தொடும் பொருட்களை அடிக்கடி சுத்தப்படுத்துங்கள்.
5. தடுப்பூசி:
குழந்தைகள் வயதிற்கு ஏற்ற தடுப்பூசிகளை கவனமாய் போட்டு விடுங்கள். தடுப்பூசி குழந்தைகளின் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை உருவாக்க மிக அவசியம். ஆரம்ப சுகாதார நிலையத்திலோ அல்லது உங்கள் மருத்துவரிடமோ குழந்தைக்கான தடுப்பூசி அட்டவணை பெற்று அந்த அட்டவணையை தவறாமல் பின்பற்றுங்கள்.