முகம் தங்கம் போல் ஜொலித்திட நூறு முறை நெய்யை கழுவ வேண்டுமா?

சமீப காலமாக இணையத்தை திறந்தாலே மிகப் பிரபலமாகி கொண்டு இருப்பது 100 முறை கழுவப்பட்ட நெய். ஒரு தாம்பாளம் மற்றும் கிண்ணம் வைத்து அதில் நெய்யை ஊற்றி பலரும் இதனை சுழற்றி சுழற்றி முயற்சி செய்து தயாரித்துக் கொண்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். உண்மையிலேயே இது என்ன மாய்ஸ்ரைசர் என்பதை தெரிந்து கொள்ள இந்த கட்டுரையை படியுங்கள். இது இயற்கையான முறையில் ஆயுர்வேத வழிகாட்டுதலின் படி நெய்யை கொண்டு சருமத்திற்கு தயாரிக்கப்படும் மாய்ச்சரைசர் என்று கூறப்படுகிறது.

பொதுவாகவே மாய்ஸ்ரைசர் நம்முடைய சருமத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒருவரின் சருமத்தை வறட்சியிலிருந்து பாதுகாக்க மாய்ஸ்ரைசர் மிக மிக முக்கியம். இன்று சந்தைகளில் குறைவான விலையில் தொடங்கி விலை உயர்ந்த மாய்ஸ்ரைசர் வரை கிடைக்கின்றன. இவை அனைத்தும் ரசாயன பொருட்களால் ஆனவை. அதிலும் சில மாய்ஸ்ரைசர்கள் தற்சமயத்திற்கு சருமத்தை நீரேற்றமாக வைத்திருப்பதை போல தெரிந்தாலும் ஒரு சில மணி நேரங்களிலேயே முகத்தை மீண்டும் வறட்சியாக்கி விடும்.

ஆனால் நெய்யால் தயாரிக்கப்படும் இந்த கிரிம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நம்முடைய முன்னோர்களால் தயாரித்து பயன்படுத்தப்பட்ட ஒன்று என்று கூறப்படுகிறது. கீ.மு 400 – 200 ஆம் ஆண்டு காலத்தில் சரக சம்ஹிதை என்னும் ஆயுர்வேத நூலில் இந்த நெய் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நூலில் “ஷத தௌதா க்ரிதா” என்று இந்த நெய் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஷத என்றால் நூறு, தௌதா என்றால் கழுவுதல், க்ரிதா என்றால் நெய் என்று கூறப்படுகிறது.

இதனை முழு பௌர்ணமி நாள் அன்று தயாரிக்க வேண்டுமாம். சுத்தமான செப்பு தாம்பலம் மற்றும் கிண்ணம் வைத்து இதனை தயாரிக்க வேண்டியது மிக முக்கியம். அதேபோல் இந்த தயாரிப்பிற்கு தூய்மையான பசு நெய்யை பயன்படுத்த வேண்டியது மிக அவசியம். இதில் நாம் இரண்டு மேசை கரண்டி அளவு நெய் பயன்படுத்தி செய்தாலே நமக்கு மிக அதிக அளவிலான கிரிம் கிடைக்கும். இவ்வாறு செய்வதினால் நெய்யில் உள்ள மூலக்கூறுகள் உடைந்து இலகுவாகி சருமம் எளிதில் உட்கிரகிக்கும் வண்ணம் இது இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நெய்யினால் சருமம் பொலிவு பெறும் என்பது மட்டுமின்றி சருமத்திற்கு இன்னும் பல நன்மைகள் இருப்பதாக கூறப்படுகிறது. முக அழகிற்காக மட்டுமல்லாமல் மருத்துவ ரீதியாகவும் இதை பயன்படுத்தி வந்தனர் என்றும் சொல்லப்படுகிறது. இன்று மீண்டும் மக்களால் இந்த கிரீம் கொண்டாடப்பட்டு வருகிறது. சந்தைகளில் விற்கப்படும் ரசாயனங்களை விட நாமே வீட்டில் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் இந்த கிரீமின் நன்மைகளால் இன்று அனைவரிடமும் பிரபலம் அடைந்து வருகிறது.