விருச்சிகம் புத்தாண்டு- 2024 ராசி பலன் இதோ!

விருச்சிக ராசி அன்பர்களே 2024 ஆம் ஆண்டினைப் பொறுத்தவரை சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி என எந்தவொரு பெயர்ச்சியும் கிடையாது. குரு பெயர்ச்சி மட்டும் மே மாதத்தில் நடக்கவுள்ளது.

சனி பகவான் கும்ப ராசியில் இருக்க, குரு பகவான் மேஷ ராசியில் இருக்க, ராகு பகவான் மீன ராசியிலும், கேது பகவான் கன்னி ராசியில் இருக்க என்பதுபோல் கிரகங்களின் அமர்வு இருக்கும்.

சந்திரன் நீச்சம் பெற்ற ராசிக்காரர்கள் விருச்சிக ராசிக் காரர்கள். நீங்கள் இப்போது மட்டுமல்ல, எப்போதும் வாழ்க்கையில் சிறப்பாக இருக்க அனுபவம் வாய்ந்த குருவிடம் முறைப்படி யோகா கற்றுக் கொள்ளுங்கள்.

யோகா, தியானம் உங்களை மிகவும் வலிமையானவராக மாற்றும். விநாயகர் வழிபாடு, துர்க்கை வழிபாடு மிக முக்கியம். பெண் தெய்வ வழிபாடு உங்களுக்குச் சகல நன்மைகளையும் கொடுக்கும். அபிராமி அந்தாதியை தினசரியும் பாடி வாருங்கள்.

தொழிலில் இருந்த சிக்கல்கள் படிப்படியாகத் தீரும். பெற்றோர், பெரியோர்களின் உடல் ஆரோக்கியத்தில் மிகக் கவனம் தேவை.

உடன்பிறந்தோர்களுடன் சண்டை, சச்சரவுகள் ஏற்படும். வயிறு சார்ந்த உடல் தொந்தரவுகள், தொற்றுநோய் உபத்திரங்கள், தோல் சார்ந்த தொற்றுக்கள் என்பது போன்ற உடல் நலப் பாதிப்புகள் ஏற்படும்.

சுப காரியத்தில் இருந்த தடைகள் நீங்கும். சித்திரை மாதத்துக்குப் பின் இதுவரை தள்ளிப் போன சுப காரியங்கள் மீண்டும் கைகூடி வரும்.

பிள்ளைகள் விஷயத்தில் கோப, தாபம் வேண்டாம். பிள்ளைகள் வண்டி, வாகனங்களில் செல்லும்போது கவனமாகச் செல்ல அறிவுறுத்தல் வேண்டும்.

பிள்ளைகள் செய்யும் தவறை அன்போடு அரவணைத்துச் சுட்டிக் காட்டுங்கள். வேலைவாய்ப்பு ரீதியாக மாற்றங்கள் செய்ய நினைப்போர் தற்போதைக்கு எந்தவொரு மாற்றத்தினையும் செய்யாமல் இருத்தல் நல்லது.

நீங்கள் வேலை, தொழில் போன்ற விஷயங்கள் சார்ந்த மாற்றங்களுக்குத் தற்போது திட்டமிடுங்கள்; ஆனால் காத்திருந்து அதனை சித்திரை மாதத்தில் செயல்படுத்துங்கள்.

உடல் பிரச்சினைகளைக் காட்டிலும் மன அழுத்தம் உங்களுக்கு அதிகரிக்கும். எதைச் செய்யும்போதும் நிதானித்துப் பொறுமையுடன் செய்து முடித்தல் வேண்டும்.