தனுசு குரு பெயர்ச்சி ராசி பலன் 2024-25!

2024 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்குப் பெயர்கிறார். தனுசு ராசி அன்பர்களே கடந்த காலத்தில் நடந்த சனி பெயர்ச்சி, ராகு- கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி உங்களுக்குச் சாதகப் பலன்களையே கொடுத்துள்ளது.

தனுசு ராசியினைப் பொறுத்தவரை குரு பெயர்ச்சியில் குரு பகவான் உங்கள் வீட்டில் இருந்து 6 ஆம் வீட்டிற்குப் பெயர்கிறார். எதிரிகள், பிரச்சினைகள், துரோகிகள் என அனைத்தையும் எதிர்கொள்ள உங்களுக்குத் துணை நிற்பார்.

உங்கள் மனநிலையினை நீங்கள் நடுநிலையாக வைத்துக் கொண்டு செயல்பட்டால் உங்களை நோக்கி வரவிருக்கும் பிரச்சினைகளை நிதானத்துடன் சமாளிப்பீர்கள்.

வேலை செய்யும் இடங்களில் நீங்கள் பொறுமையாகவும், நிதானத்துடனும் செயல்படுதல் வேண்டும். தேவையற்ற பேச்சுகள், வீண் வாக்குவாதங்கள் உங்களை வீண் பிரச்சினைகளுக்கு இட்டுச் செல்லும்.

6 ஆம் இடத்தில் குரு பகவான் இருப்பதால் முதலீடு செய்கையில் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்துச் செயல்படுதல் வேண்டும். தொழிலை விரிவுபடுத்துதல், புதுத் தொழில் துவங்குதல் போன்ற திட்டங்கள் கொண்டிருந்தால் அதனை அப்படியே தள்ளி வைக்கவும்.

வேலை, தொழில் போன்றவை ஓரளவு செல்லும் பட்சத்தில் அதனை மாற்றாமல் அப்படியே கொண்டு செல்வது நல்லது. மாணவர்களைப் பொறுத்தவரை எடுக்கும் முயற்சிக்கு ஏற்ற வெற்றியினைப் பெறுவீர்கள்.

சேமிப்பு என்ற பெயரில் வீடு, மனை வாங்குதல் போன்றவற்றிற்காக தேவையில்லாத கடன்களை வாங்காதீர்கள். மிகத் தேவையான பொருட்களை மட்டுமே வாங்குங்கள்; இல்லையேல் தேவையற்ற கடன் சுமைக்கு ஆளாவீர்கள்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை குரு பலன் இல்லை; அதனால் எடுக்கும் முயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படும். கைகூடி வரும் திருமணங்களும் கடைசியில் தட்டிப் போக வாய்ப்புண்டு.

அவ்வப்போது உடல் நலக் கோளாறுகள் ஏற்படும். அடிவயிறு, செரிமான உறுப்புகள் போன்றவற்றில் தொந்தரவுகள் காணப்படும். மேலும் அதனைச் சரிசெய்ய மருத்துவச் செலவுகளும் ஏற்படும்.

குரு பகவான்- செவ்வாய் பகவான் சேர்க்கை மங்கல யோகத்தினையும், குரு- சூர்ய பகவான் சேர்க்கை பதவி அதிகாரத்தினையும், குரு- புதன் சேர்க்கை தேவையில்லாத வாக்குவாதத்தினையும், குரு- சனி பகவான் சேர்க்கை தொழில்ரீதியான மேம்பாட்டினையும் கொடுக்கும்.