உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும் தரமான சில டிப்ஸ்…!

ஒவ்வொரு மனிதனிடமும் இருக்க வேண்டிய மிக முக்கியமான ஒன்று தான் தன்னம்பிக்கை. தன்னம்பிக்கை நிறைந்து இருந்தால் மட்டும்தான் தங்கள் வாழ்க்கையில் வரும் சவால்களை சந்தித்து தடைகளை தாண்டி பலரும் சாதிக்க முடிகிறது. நம்மால் முடியாது என்று துவண்டு போய் இருப்பவர்கள் இறுதிவரை வாழ்வில் முன்னேற முடிவதில்லை. முடியும் என்ற தன்னம்பிக்கையோடு போராடுபவர்கள் மட்டுமே சாதனையாளர்களாக மாறுகிறார்கள். அந்த தன்னம்பிக்கையை உங்களுக்குள் வளர்த்துக் கொள்வதற்கு சில வழிமுறைகளை பின்பற்றி பாருங்கள்.

1. உங்கள் சாதனைகளை பட்டியலிட்டு கொள்ளுங்கள். சிறுவயதிலிருந்து நீங்கள் சாதித்தவற்றை ஒரு பட்டியலாக எழுதி வைத்தால் நல்லது. உங்களைப் பற்றி நினைக்கும் பொழுது நீங்களே பெருமைப்படக்கூடிய விஷயங்களை அதில் எழுதலாம். தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றது, நீங்களாகவே முயன்று கற்றுக் கொண்ட திறன்கள் என எதை நினைத்தால் நீங்களே பெருமைப்படுவீர்களோ அது போன்ற விஷயங்களை எழுதிக் கொள்ளுங்கள். உங்களின் மீது உங்களுக்கே சந்தேகம் வந்து மனச்சோர்வு அடையும் தருணங்களில் அந்த பட்டியலை எடுத்துப் பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு தன்னம்பிக்கை கிடைக்கும்.

2. ஒவ்வொருவருக்கும் தனித்திறமைகள் மற்றும் சில குறிப்பிட்ட விஷயங்களில் பலம் என்பது கண்டிப்பாக இருக்கும். அதை என்ன என்பதை கண்டறிதல். அவர்களின் தனித்திறமைகளை வளர்க்கும் செயல்களில் ஈடுபட்டால் நிச்சயமாக தன்னம்பிக்கையுடன் செயல்பட முடியும்.

3. மிகச் சிறிய இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளுதல். உங்களுக்கு விருப்பமான சிறிய இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு அந்த இலக்கினை அடைய முயற்சி செய்ய வேண்டும். அந்த இலக்குகளில் வெற்றி அடைய அடைய தன்னம்பிக்கை கூடும்.

4. உங்களைப் பற்றி உங்கள் மனதில் இருக்கக்கூடிய எதிர்மறையான எண்ணங்களை முதலில் விரட்டி அடியுங்கள். உங்களால் முடியாது, உங்களால் எதையுமே செய்ய இயலாது என்ற எண்ணம் இருப்பின் அதனை அடியோடு விரட்டி விடுங்கள். உங்களுக்கு நீங்களே உற்ற நண்பனாய் இருந்து உங்களை உற்சாகப்படுத்தும் வண்ணம் உங்களிடம் பேசுங்கள்.

5. ஓவியம், வண்ணம் தீட்டுதல், ஆடை வடிவமைத்தல், எழுதுதல் என உங்களுக்கு ஏதேனும் திறன்களில் ஆர்வம் இருந்தால் அதனை மெருகேற்ற பாருங்கள். ஓய்வு நேரத்தில் உங்களுக்கு பிடித்தமான வேலைகளை செய்து உங்களை நீங்களே பாராட்டி கொள்ளுங்கள் நிச்சயம் உங்கள் மீது உங்களுக்கே நன்மதிப்பு அதிகரிக்கும் இதனால் தன்னம்பிக்கை கூடும்.