அட… தண்ணீர் குடிப்பதால் உங்கள் சருமத்திற்கு இத்தனை நன்மைகளா…!

தண்ணீர் இல்லாமல் ஒரு மனிதனால் உயிர் வாழவே முடியாது. அந்த அளவிற்கு மிக அத்தியாவசியமான தேவை தண்ணீர். தண்ணீர் மனிதனின் தாகத்தை தீர்க்கக் கூடியது மட்டுமல்ல. தண்ணீர் குடிப்பதால் உடல் நலத்தில் எந்தவித பிரச்சனையும் ஏற்படாமல் பாதுகாக்க முடியும். அதுபோல முறையாக தண்ணீர் பருகி வந்தால் சருமமும் ஆரோக்கியமாக இருக்கும். தண்ணீர் பருகுவதற்கும் சருமத்திற்கும் என்ன சம்பந்தம்? என்று நீங்கள் நினைக்கலாம். தண்ணீர் போதுமான அளவு பருகினாலே போதும் சருமத்தில் ஏற்படக்கூடிய மிக முக்கிய பிரச்சனைகளை வராமல் தடுக்கலாம். தண்ணீர் குடிப்பதால் என்னென்ன சரும பிரச்சனைகள் சரியாகும் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

1. சருமத்தில் ஏற்படும் தொய்வு:

சிலருக்கு சருமத்தில் இள வயதிலேயே தொய்வு ஏற்படும் சருமம் இறுக்கமாக இல்லாமல் தொய்வாய் காணப்படுவதால் வயதான தோற்றம் போன்று இருக்கும். இந்த தொய்வு ஏற்படாமல் இருப்பதற்கு சருமத்திற்கு போதுமான அளவு நீர்ச்சத்து அவசியம். இந்த நீர்ச்சத்து கிடைக்க தினமும் எட்டு டம்ளர் அளவாவது தண்ணீர் பருக வேண்டும்.

2. பிஹெச் அளவு:

சருமத்தில் உள்ள ph அளவு சம நிலையில் இல்லை என்றால் அது சருமத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும். பொதுவாக பிஎச் அளவு 0 இருந்து 14 வரை கணக்கிடப்படும். இந்த பிஹெச் அளவு 7ல் இருக்கும் பொழுது தான் அது நடுநிலையாக இருக்கிறது என்று அர்த்தம். இந்த நடுநிலையை அடைய முறையாக தண்ணீர் பருக வேண்டும்.

3. நச்சுத்தன்மையை வெளியேற்றல்:

உடலில் உள்ள தேவையற்ற மாசக்களையும் நச்சுத்தன்மையும் வெளியேற்றுவதன் மூலம் சருமத்தை பொலிவு பெறச் செய்யலாம். இந்த நச்சுத்தன்மையை அடியோடு வெளியேற்ற வேண்டும் என்றால் அதற்கு தண்ணீர் நிறைய பருக வேண்டும். இது சருமத்திற்கு மட்டுமின்றி உடல் நலத்திற்கும் நன்மை தரும்.

4. சருமத்தில் ஏற்படும் சுருக்கம்:

தண்ணீர் நிறைய பருகுவதால் சருமம் எப்பொழுதும் நீரேற்றத்துடன் இருக்கும். இவ்வாறு நீரேற்றத்துடன் காணப்படுவதன் மூலம் சருமத்தில் விரைவில் சுருக்கம் ஏற்படாமல் காக்கப்படுகிறது. இள வயதிலேயே ஏற்படும் சுருக்கத்தை இது வரவிடாமல் தடுக்க உதவுகிறது.

5. முகப்பரு மற்றும் மருக்கள்:

நம்முடைய சருமத்தில் கண்களுக்கு புலப்படாத மிகச்சிறிய நுண்ணிய துளைகள் காணப்படும். இந்த நுண்ணிய துளைகள் வழியாக நச்சுக்கள் முறையாக வெளியேறி விட வேண்டும். அவ்வாறு வெளியேறாமல் துளைகளில் அடைப்பு ஏற்பட்டால் அதனால் பருக்கள் அல்லது மருக்கள் உண்டாக வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு பருக்கள் உண்டாகாமல் இருக்க வேண்டும் என்றால் சருமம் நீரேற்றத்துடன் இருப்பதோடு துளைகள் வழியாக நச்சுக்கள் வெளியேற வேண்டும். அதற்கு அதிக தண்ணீர் பருகுதல் மிகவும் அவசியம்.

6. நெகிழ்வு தன்மை:

உங்கள் கைவிரலில் மெதுவாக கிள்ளி பாருங்கள். நீங்கள் கிள்ளிய பகுதி மீண்டும் பழைய நிலையை உடனே அடைந்து விட்டால் உங்கள் சருமம் போதிய நீரேற்றத்துடன் இருக்கிறது என்று அர்த்தம். அவ்வாறு இல்லாமல் பழைய நிலையை மிக மெதுவாக அடைந்தால் உங்கள் சருமத் நீரேற்றத்துடன் இல்லை என்று அர்த்தம். இவ்வாறு சருமம் நெகிழ்வு தன்மையுடன் இருக்க போதுமான அளவு தண்ணீர் மிக முக்கியம்.