தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் உள்ள நாடுகளால் கொண்டாடப்படும் மிக முக்கியமான ஒரு பண்டிகை தைப்பூசம். முருகக்கடவுள் மட்டும் இல்லாமல் சிவபெருமான் அம்மன் என அனைத்து தெய்வங்களுக்கும் இந்த தைப்பூசம் மிக விசேஷமான நாளாக கருதப்படுகிறது. இந்த தைப்பூச திருநாள் பற்றி பலருக்கும் தெரியாத சில அரிய தகவல்களை பற்றி பார்க்கலாம்.
தொட்டதெல்லாம் துலங்கச் செய்யும் தைப்பூசத்தின் வரலாறும், சிறப்புகளும்…!
- தைப்பூசத் திருநாள் பௌர்ணமி நாளன்று முழு நிலவு சமயத்தில் பூச நட்சத்திரம் வரும் பொழுது வழிபாடு செய்வதே மிக முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.
- முருகப்பெருமானின் அருளை முழுமையாக பெற தைப்பூச தினத்தன்று கடைப்பிடிக்கும் விரதமே மிக முக்கிய விரதமாக கருதப்படுகிறது.
- தைப்பூசத்தன்று தொட்டதெல்லாம் துலங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
- தைப்பூச திருநாளன்று குழந்தைகளுக்கு காதணி விழா செய்தல், புதுமனை புகுவிழா நடத்துதல், கல்வி கற்க தொடங்குதல், புதிய வேலைகளை ஆரம்பித்தல் ஆகியவை சிறப்பானதாக கருதப்படுகிறது.
- உலக நாடுகளில் தைப்பூசத் தினத்தை அரசு விடுமுறையாக கொண்டாடும் நாடு மலேசியா.
- தேவர்களுக்கே குருவாக கருதப்படுபவர் பிரகஸ்பதி. இவரின் நட்சத்திரம் பூசம் நட்சத்திரமாகும். எனவே தைப்பூச தினத்தன்று குரு வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
- உலகிலேயே முதல் நீர் தைப்பூச திருநாள் அன்றுதான் உருவானது என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. அதில் இருந்து தான் மற்ற உயிரினங்கள் தோன்ற ஆரம்பித்தன என்றும் கூறுகின்றன.
- சிதம்பரத்தில் நடராஜ பெருமான் உமாதேவியுடன் சேர்ந்து ஆனந்த நடனமாடி தைப்பூச திருநாள் அன்றுதான் காட்சியளித்ததாக கூறப்படுகிறது.
- அசுரனை அளிக்க பார்வதி தேவி தன்னுடைய அனைத்து சக்திகளையும் ஒன்றாக திரட்டி வேலை உருவாக்கி அந்த வேலினை முருகப்பெருமானுக்கு தைப்பூச தினத்தில் தான் அளித்ததாக கூறப்படுகிறது.
- தைப்பூசத்தன்று பால், பழம் மட்டுமே உண்டு விரதம் இருந்தால் மிகவும் சிறப்பானது. அன்று பழைய உணவுகளை உண்ணக்கூடாது.