படுத்த உடனே தூங்க பக்காவான டிப்ஸ்… தூக்கம் வராமல் தவிப்பவர்கள் இதை ஃபாலோ பண்ணுங்க…!

தூக்கம் என்பது வெறும் ஓய்வு மட்டும் அல்ல அது அவர்களின் உடல் மற்றும் மன நலன் குறித்த வெளிப்பாடு ஆகும். தூக்கம் சரிவர வராதவர்களுக்கு பல்வேறு உடல் நல மற்றும் மனநல பிரச்சனைகள் ஏற்படும் என்பதை பலரும் அறிந்திருப்போம். ஆனால் என்னதான் முயற்சி செய்தாலும் சிலருக்கு படுத்த உடனேயே தூக்கம் என்பது எட்டாத கனியாகவே இருக்கிறது. இதற்காக மருந்து மாத்திரைகள் சாப்பிடுவதை விட இயற்கையான முறையில் முயற்சி செய்து பார்த்தல் சிறந்தது. அப்படி படித்த உடனேயே தூங்க பக்காவான சில டிப்ஸ்களை பார்க்கலாம்.

1. தினமும் உறங்கச் செல்வதற்கு சரியான நேரத்தை பின்பற்றுங்கள். பலரும் அன்றாடம் உறங்கும் நேரத்தை மாற்றிக் கொண்டே இருந்தால் தூக்கம் தடைபடும். எனவே உங்கள் 24 மணி நேர சுழற்சியில் தூங்குவதற்கான நேரத்தை சரியான முறையில் ஒதுக்கி வந்தால் தூக்கம் கட்டாயம் வரும்.

2. நீங்கள் உறங்கும் அறையில் வெளிச்சம் ஏதும் இல்லாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். வெளிச்சம் தூக்கத்திற்கு இடையூறாக இருக்கும். எனவே முடிந்தவரை உங்கள் படுக்கை அறை தூங்கும் நேரத்தில் நல்ல இருட்டாக இருக்கும்படி வைத்துக் கொள்ளுதல் நல்லது. அதேபோல் அதிக இரைச்சல் இல்லாத படியும் பார்த்துக் கொள்ளுங்கள்.

3. தூங்கச் செல்ல ஒரு மணி நேரம் முன்னதாக உங்கள் மொபைல் போனை பயன்படுத்துவதை நிறுத்தி விடுங்கள். அதற்கு பதிலாக வேறு ஏதேனும் புத்தகங்களை படிக்கலாம். உறங்கச் செல்வதற்கு முன்பாக மொபைல் பயன்படுத்தினால் தூக்கம் சரியாக வராது.

4. பகல் நேர தூக்கத்தை குறைத்து விடுங்கள். பகலில் இரண்டு மணி நேரத்திற்கு அதிகமாக நீங்கள் தூங்கிவிட்டால் நிச்சயம் உங்கள் இரவு தூக்கம் தடைபடும். எனவே பகல் நேரத்தில் தூங்க வேண்டாம். அதற்கு பதிலாக உடற்பயிற்சியை பகல் நேரத்தில் அதிகம் செய்யுங்கள். தூக்கம் எளிதில் வந்துவிடும்.

5. தூங்கச் செல்வதற்கு மூன்று மணி நேரம் முன்னதாக உங்கள் இரவு உணவை முடித்து விடுங்கள். இரவு உணவு செரிமானம் ஆன பிறகு நீங்கள் தூங்கச் சென்றால் நிச்சயம் தூக்கம் நன்றாக வரும். சாப்பிட்ட உடனேயே தூங்க கூடாது.

6. கஃபைன் உள்ள பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இவை மூளையை புத்துணர்ச்சியாக வைத்திருக்கக்கூடிய தன்மை உடையது. எனவே கஃபைன் உள்ள காபி, டார்க் சாக்லேட் ஆகியவற்றை தூங்கச் செல்வதற்கு முன்பாக சாப்பிட வேண்டாம்.

7. நல்ல பாடல் கேட்டல், மூச்சுப் பயிற்சி அல்லது யோகா செய்தல், வெதுவெதுப்பான நீரில் குளித்தல் என மனதிற்கு இதமான செயல்களில் ஈடுபட்ட பிறகு தூங்கச் சென்றால் நிச்சயம் தூக்கம் நன்றாக வரும்.