உங்கள் குழந்தையை அலங்கரிக்க அளவுக்கு அதிகமான பவுடர் பூசுபவரா நீங்கள்? அப்போ இதை படியுங்க!

குழந்தைகள் வளர்ப்பில் மிக முக்கியமான ஒன்று குழந்தைகளை தூய்மையாக பராமரிப்பது தான். குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி முழுமை பெறாத சமயத்தில் அவர்களுக்கு எளிதில் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே குழந்தைகளையும் அவர்களின் சுற்றுப்புறத்தையும் எப்பொழுதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். குழந்தைகளை சுத்தப்படுத்த வீடுகளில் குழந்தைகளை குளிப்பாட்டி விடுவது இயல்புதான்.

ஆனால் பெரும்பாலான வீடுகளில் குழந்தையை குளிப்பாட்டி விட்ட பிறகு அளவுக்கு அதிகமான பவுடரை அந்த குழந்தைகளின் மேல் பூசி விடுவதை நாம் கண்கூடாக பார்த்திருப்போம். அதேபோல் இயற்கை உபாதைகளை குழந்தைகள் கழித்த பிறகும், டயாப்பர்களை மாற்றும் பொழுதும் அவர்களை சுத்தப்படுத்தி டயாப்பர் பகுதிகளில் பவுடர் அடிப்பார்கள்.

குழந்தைகளின் காதுகளை சுத்தம் செய்ய நினைக்கிறீர்களா? அதற்கு முன் இவற்றை எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்…!

இவ்வாறு குழந்தைகளின் மேல் அளவுக்கு அதிகமாக பவுடர் அடிப்பது நல்லதா என்று யாரும் யோசித்தது கிடையாது. ஆனால் உண்மையிலேயே இவ்வாறு பவுடரை குழந்தையின் மீது அடிப்பது சரியான முறை அல்ல. பவுடர் நுண்ணிய துகள்களை உடையது இது குழந்தைகளின் மூச்சுப்பகுதி வழியாக சென்று அவர்களின் சுவாச பாதை, நுரையீரல் ஆகியவற்றை பாதிக்க கூடிய வாய்ப்பு மிக அதிகமாக இருக்கிறது.

மேலும் இது டால்க் எனப்படும் ஒரு வகையான கனிம கலவையினால் தயாரிக்கப்படுகிறது. இந்த டால்க் என்னும் கனிமக் கலவையானது குழந்தைகளுக்கு புற்றுநோயை உண்டாக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த டால்க் கலவையை சுவாசிப்பதால் எளிதில் ஆஸ்துமா பிரச்சனை ஏற்படக்கூடிய வாய்ப்பும் உண்டு.

இந்த வகையான பவுடர்களின் மெக்னீசியம், சிலிக்கான் மற்றும் ஆக்ஸிஜன் கூறுகள் கலந்துள்ளது. இது குழந்தைகளின் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை முழுமையாக உறிஞ்சி விடும் இது சருமத்தை எளிதில் வறட்சி அடைய செய்யும். அதிலும் குறிப்பாக குழந்தைகளின் டயப்பர் பகுதிகளில் அளவுக்கு அதிகமாக பவுடர் பூசவே கூடாது.

பவுடர் பூசியே ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள் மருத்துவரின் அறிவுரையோடு டால்க் இல்லாத இயற்கை முறையில் செய்யப்பட்ட பவுடரை குழந்தைகளுக்கு லேசாக பூசி விடலாம். கண், மூக்கு, வாய் ஆகிய பகுதிகளில் படாமல் கைகளில் இடுக்கு, தொடை இடுக்கு ஆகிய பகுதிகளில் பூசி விடலாம். அதுவும் நேரடியாக கொட்டக் கூடாது கைகளிலோ அல்லது ஒரு துணியிலோ கொட்டி பூசி விடலாம்.

ஆனால் இதுவும் அவசியம் இல்லை என்றே மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். குழந்தைகளை நன்கு குளியாட்டிய பிறகு ஈரப்பதம் இல்லாமல் மென்மையாக துடைத்துவிட்டு அந்தந்த பருவ நிலைக்கு ஏற்ப ஆடைகளை அணிவித்தாலே போதுமானது. அதேபோல டயப்பரை மாற்றும் பொழுதும் அந்தப் பகுதியை நன்கு சுத்தம் செய்த பிறகு சிறிது நேரம் காற்றோட்டமாக விட்டு அதன் பிறகு வேறொரு டயப்பரை மாற்றலாம்.