உங்க பற்களை பராமரிக்க இந்த வழிகள் போதும்… ஆரோக்கியமான பற்களுக்கு அவசியமான பராமரிப்பு முறைகள்!

பற்கள் நம்முடைய உணவை நன்கு மென்று சாப்பிட்டு உடலுக்கு தேவையான ஆற்றல் நமக்கு கிடைக்க காரணமாக இருக்கக்கூடிய மிக முக்கியமான உறுப்பு. பற்கள் உணவை மென்று சாப்பிடுவதற்கு மட்டுமல்ல நாம் பேசுவதற்கும் துணை புரிய கூடிய உறுப்பு எனலாம். எனவேதான் “பல் போனால் சொல் போச்சு” என்ற பழமொழி நம்முடைய முன்னோர்களால் கூறப்பட்டு வந்தது.

இந்த பற்களை பராமரிக்க நாம் என்ன செய்கிறோம்? என்று யோசித்துப் பார்த்தால் எதுவுமே இல்லை.. பற்களில் பிரச்சனை என்று வரும் வரை அந்த பற்களை பற்றி நாம் யோசிப்பதே இல்லை. தினமும் காலை இரண்டு நிமிடம் பல் துலக்க நேரம் செலவிடுவதோடு சரி. அதற்குப்பின் பற்களைப் பற்றி மறந்தே விடுகிறோம்.

நாம் ஆரோக்கியமாக வாழ நம்முடைய பற்களையும் ஒழுங்கான முறையில் பராமரிக்க வேண்டும். இதற்கு அதிகமான மெனக்கிடல் எதுவும் தேவையில்லை. இதோ இந்த பத்து வழிமுறைகளை பின்பற்றி பாருங்கள் உங்கள் பற்கள் ஆரோக்கியமாக வாழ்நாள் முழுவதும் எந்த பிரச்சனையும் இன்றி இருக்கும்.

1. இரவு பல் துலக்குதல் :

எப்பொழுதும் உறங்கச் செல்வதற்கு முன்பு உங்கள் பற்களை துலக்காமல் உறங்கச் செல்லாதீர்கள். இரவு பல் துலக்குதல் என்பதை பலரும் அலட்சியமாக விட்டு விடுவர். நீங்கள் காலையில் இருந்து உறங்கச் செல்லும் வரை பலவிதமான உணவுகளை சுவைத்திருப்பீர்கள். இந்த உணவுகளின் துணுக்குகள் உங்கள் வாயில் இரவு முழுவதும் இருந்தால் உங்கள் பற்களை அது வெகுவாக சிதைத்து விடும். எனவே எவ்வளவு நேரம் ஆனாலும் சரி இரவு பல் துலக்காமல் உறங்கச் செல்லாதீர்கள் பற்களை நன்கு துலக்கி சுத்தம் செய்த பிறகே நீங்கள் படுக்கை நோக்கி செல்ல வேண்டும்.

2. தினமும் முறையாக பல் துலக்குதல்:

பல் துலக்காமல் இருப்பது எவ்வளவு மோசமானதோ அதே அளவு மோசமானது முறையாக பற்களை துலக்காமல் இருப்பது. பல் துலக்கும் வேலையில் அலட்சியமாக இல்லாமல் பற்களை வட்ட இயக்கத்தில் அனைத்து பற்களையும் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். முறையாக பற்களை சுத்தம் செய்யாமல் கரை படிந்து இருந்தால் அது நாளடைவில் பற்களின் ஈறுகளை சிதைத்து விடக் கூடிய ஆபத்து உண்டு.

3. நாவினை சுத்தம் செய்யுங்கள்:

பற்களை துலக்குதல் என்பது வெறும் பல்லை மட்டும் சுத்தம் செய்தல் அல்ல. பல் துலக்கி முடித்த பிறகு நாக்கையும் சுத்தம் செய்ய வேண்டும். இதனால் வாயில் இருந்து துர்நாற்றம் வீசாமல் இருப்பதோடு வாயில் தேவையில்லாத பாக்டீரியாக்கள் இருப்பதையும் அழிக்க முடியும்.

4. ஃப்ளோஸிங் செய்தல்:

ஃப்ளோஸிங் என்பது முழுமையான வாய் சுகாதார முறையாகும். இதனால் பல் இடுக்குகளில் சிக்கியுள்ள உணவுகளை நீக்க முடியும் அது மட்டுமின்றி பற்களில் கறை படியாமல் பாதுகாக்க முடியும். இதனால் ஈறுகள் வலுவாக இருப்பதோடு பற்களும் ஆரோக்கியமாக இருக்கும்.

5. புளோரைடு அடங்கிய பற்பசை:

பற்களை பளபளக்க செய்வதற்கும் எப்பொழுதும் புத்துணர்ச்சியாக வைப்பதற்கும் பல்வேறு வகையான பற்பசைகள் இன்று கிடைக்கின்றன. நீங்கள் எந்த பற்பசையை தேர்ந்தெடுத்தாலும் அதில் ப்ளோரைடு இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டியது மிகவும் அவசியம். புளோரைடு கிருமிகளுக்கு எதிராக போராடி பற்களை பற்சிதைவிலிருந்து பாதுகாக்கிறது.

6. தண்ணீர் பருகுவது:

தண்ணீர் பருகுவது என்பது நம்முடைய முழு உடலுக்கும் நன்மை தரக்கூடிய ஒரு செயலாகும். நீங்கள் உங்களின் ஒவ்வொரு வேளை உணவு உண்ட பிறகும் தண்ணீரில் வாய் கொப்பளித்த பிறகு நிறைய தண்ணீர் பருகுதல் நல்லது.

7. பழங்கள் மற்றும் காய்கறிகளை மென்று சாப்பிடுதல்:

இன்று பலருக்கும் சாப்பிடுவது என்பதே கடினமான வேலையாக இருக்கிறது. நன்றாக கடித்து மென்று சாப்பிடக்கூடிய பழங்கள் மற்றும் காய்கறிகளை தினமும் சாப்பிடுங்கள். அப்பொழுதுதான் அதில் உள்ள முழுமையான நார்ச்சத்துக்கள் உங்களுக்கு கிடைக்கும். குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது அவர்களையும் நன்கு மென்று சாப்பிட பழக்குங்கள்.

8. இனிப்பு வகைகளை தவிர்ப்பது:

கூடுமானவரை அளவிற்கு அதிகமாக சர்க்கரை சேர்த்த இனிப்பு பண்டங்கள் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளுங்கள். இதனால் பற்களில் கேவிட்டீஸ் எனப்படக்கூடிய துவாரங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

9. பல் மருத்துவரை சந்தியுகங்கள்:

ஏதேனும் பிரச்சனை வந்தால் தான் நீங்கள் பல் மருத்துவரை சந்திக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் பற்களை வருடத்திற்கு இரண்டு முறையாவது உங்கள் பல் மருத்துவரிடம் காண்பித்து பரிசோதனை செய்து கொள்ளுதல் நல்லது. அவ்வபோது தேவைப்பட்டால் மருத்துவர்களிடம் சென்று சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

மேற்கண்ட வழிமுறைகளை நீங்கள் தொடர்ந்து பின்பற்றி வாருங்கள் ஆரோக்கியமான பற்களுடன் புன்னகைத்து வாழுங்கள்.