கருவளையத்தைப் பற்றிய கவலையா??? இந்த டிப்ஸ்களை பின்பற்றி கருவளையத்தை சரிசெய்திடுங்கள்…!

கண்களை சுற்றி வரக்கூடிய கருவளையம் பலரையும் கவலை கொள்ளச் செய்கிறது. முகத்தில் கண்களை சுற்றிலும் வரக்கூடிய இந்த கருவளையம் முக அழகை பாதிப்பதோடு வயதான தோற்றத்தையும் தருகிறது. இந்த கருவளையம் ஏற்பட பலவிதமான காரணங்கள் இருக்கலாம். போதுமான அளவு தண்ணீர் பருகாமல் இருப்பது, முதுமை, அளவுக்கு அதிகமான புற ஊதாக் கதிர்கள், இரும்புச்சத்து குறைபாடு, போதுமான அளவு தூக்கம் இல்லாமல் இருத்தல் இப்படி கருவளையம் உண்டாக பல்வேறு காரணங்கள் இருக்கிறது. இதற்காக கிரீம்கள் பயன்படுத்தியும் முன்னேற்றம் இல்லை என்றால் கவலை வேண்டாம். இதை எளிமையாக வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்யலாம். இந்த கருவளையத்தை எப்படி வீட்டிலேயே சரி செய்யலாம் என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

  1. உறங்கச் செல்வதற்கு முன்பு கற்றாழையில் உள்ள ஜெல்லை கொண்டு கண்களை சுற்றி ஐந்திலிருந்து ஏழு நிமிடங்கள் வரை மசாஜ் கொடுக்கலாம். உங்களுக்கு அந்த பிசுபிசுப்பு தன்மை பிடிக்கவில்லை என்றால் கழுவி விடலாம் இல்லை என்றால் அப்படியே கூட உறங்கலாம். தொடர்ந்து இவ்வாறு செய்வதன் மூலம் கண்களை சுற்றி உள்ள கருவளையத்தை வெகுவாக குறைக்க முடியும்.
  2. கிரீன் டீ பைகள் சிலவற்றை தண்ணீரில் போட்டு அதனை குளிர்சாதன பெட்டிகள் வைத்து குளிர் ஊட்ட வேண்டும். இவ்வாறு குளிரூட்டப்பட்ட கிரீன் டீ பையை இரண்டு கண்களிலும் 15 நிமிடங்கள் வரை வைத்து எடுத்தால் கொஞ்சம் கொஞ்சமாக கருவளையம் நீங்கிவிடும்.
  3. ஒரு ஸ்பூன் அளவு தக்காளி சாறை எடுத்துக் கொள்ளவும் இதனுடன் ஒரு ஸ்பூன் அளவு எலுமிச்சை சாறை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இந்த சாற்றை கண்களை சுற்றி தடவி வர வேண்டும். பத்து நிமிடங்கள் வரை இதனை அப்படியே வைத்திருந்து அதன் பின் கழுவி விடலாம்.
  4. ஒரு காட்டன் பேடை எடுத்து அதனை சிறிது நேரம் ரோஸ் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். ஊறவைத்த காட்டன் பேடை கண்களில் பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் வைத்து எடுக்க வேண்டும். இதனை ஒரு மாதம் வரை தொடர்ந்து செய்து வந்தால் நிச்சயம் கருவளையம் நீங்கி நல்ல மாற்றம் கிடைக்கும்.
  5. குளிர்ச்சியான பாலில் ஒரு காட்டன் பஞ்சை நனைத்து கண்களை சுற்றி தேய்க்கவும். அந்த பாலை வைத்து கண்களை சுற்றி நல்ல மசாஜ் கொடுத்து சிறிது நேரம் அப்படியே வைத்துவிட்டு பின் கழுவி விடலாம். இதனை அடிக்கடி செய்து வந்தால் கருவளையம் நீங்கிடும்.