இயர் போன் பலருடைய வாழ்வில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக மாறிவிட்டது. ஒவ்வொருவரும் பலவிதமான இயர் போனுடன் தினமும் உலா வருவதை நாம் அன்றாடம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இணையதள அரங்கில் மீட்டிங் அட்டென்ட் செய்வதற்கு, பிடித்தமான பாடல்களை கேட்பதற்கு, தங்களுடைய மொபைல் போனில் கேம் விளையாடும் பொழுது, வெளிப்புற சத்தம் கேட்காமல் இருப்பதற்கு என ஒவ்வொருவரும் பலவித காரணங்களுக்காக இயர் போனை பயன்படுத்தி வருகிறார்கள்.
இவ்வாறு தினமும் இயர் போன் பயன்படுத்துபவர்களுக்கு இப்படி அதிக அளவில் இயர் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்பதை பற்றி அறியாமல் இருக்கலாம். எந்த ஒரு பொருளும் அதீத பயன்பாட்டால் ஆபத்தை தான் தரும். அது போல் தான் இயர் போனும். இயர் போன் நம் செவிப்பறைக்கு மிக அருகில் சென்று சத்தத்தை எழுப்புவதால் இயர் போன் மிக அதிக அளவிலான ஆபத்தை தரக்கூடியது. அவற்றுள் சில முக்கியமான ஆபத்துக்களை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்.
தலைசுற்றல்:
இயர் போனை நாம் தொடர்ந்து பயன்படுத்தும் பொழுது நம் காதுகளில் உள்ளே உள்ள செவிப் பாதையில் தொடர்ந்த அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு செவிப்பாதையில் கொடுக்கப்படும் தொடர் அழுத்தத்தால் பலருக்கு தலைசுற்றல் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதை ஆரம்பத்திலேயே கவனித்து விட்டால் நல்லது.
காது கேளாமை:
இயர் போனை தொடர்ந்து பயன்படுத்துவதால் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ காது கேட்காமல் போகக்கூடிய வாய்ப்பு உள்ளது. செவியில் உள்ள ஹேர் செல்லில் ஏற்படக்கூடிய தொடர் அதிர்வுகளால் ஹேர் செல் உணர்விழக்க கூடிய வாய்ப்பு உண்டு. இதன் காரணமாக காது கேட்கும் தன்மையை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ இழந்து விட நேரிடலாம்.
காதில் தொற்று:
காதல் இயர் போன் பயன்படுத்துபவர்களுக்கு அந்த செவிப் பாதையில் போதுமான அளவு காற்று சென்று வருவதற்கு இடைவெளி இருக்காது. இதனால் செவிப்பாதையில் காற்றோட்டம் இல்லாமல் தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. மேலும் ஒருவர் பயன்படுத்திய ஹெட் செட்டை மற்றொருவர் பயன்படுத்தும் பொழுது அவர் காதில் உள்ள பாக்டீரியாக்களும் தொற்றுக்களும் அடுத்தவருக்கும் பரவ நேரிடலாம்.
காதில் அழுக்கு படிதல்:
வேலை செய்யும் பொழுது அல்லது நீண்ட தூரம் பயணம் செய்யும் பொழுதோ இயர் போன் தொடர்ந்து பயன்படுத்துபவர் நீங்கள் என்றால் அதில் கவனம் தேவை. காரணம் அவ்வாறு பயன்படுத்துபவர்களுக்கு காதில் அதிக அளவு அழுக்குகளும் வியர்வையும் படிந்து தொல்லை ஏற்பட வாய்ப்பு உண்டு.
இரைச்சல்:
காதில் அதிகளவு ஏற்படக்கூடிய இரைச்சல் காரணமாகவும். காது கேளாமல் போக வாய்ப்பிருக்கிறது அதிக அளவு சத்தம் வைத்து காதுகளில் இரைச்சல் ஏற்படுவதால் இந்த ஆபத்து நிகழலாம்.
டின்னிடஸ்:
டின்னிடஸ் என்பது மற்றவர்களுக்கு கேட்காத ஒரு விதமான சத்தம் உங்களின் காதுகளுக்குள் மட்டும் ஒலித்து கொண்டே இருப்பதாகும். இவ்வாறு ஏற்படுவது காதில் மட்டுமல்ல மூளை நரம்பு மண்டலம் சம்மந்தப்பட்ட பிரச்சனையை ஏற்படுத்தலாம்.
ஹைபர்குசிஸ்:
இது மிக அரிதான ஒரு பிரச்சனை ஆகும். உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த பிரச்சனை ஏற்படலாம். அதாவது ஒரு சில குறிப்பிட்ட சத்தங்கள் கேட்கும் பொழுது பொறுமை தன்மையை இழக்க நேரிடலாம்.
அதிகளவு இயர் போன் பயன்பாடு இதுபோல பலவிதமான சங்கடங்களை ஏற்படுத்த நேரிடுகிறது. இவற்றை தவிர்க்க ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் இயர் போன் பயன்படுத்துவதை தவிர்த்தால் மிகவும் நல்லது. தினமும் பல மணி நேரங்கள் பயன்படுத்தாமல் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வந்தால் இது போன்ற ஆபத்துக்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.