2024 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்குப் பெயர்கிறார். மேஷ ராசி அன்பர்களே குரு பெயர்ச்சியினைப் பொறுத்தவரை பணரீதியிலான மேம்பாடு பெரிய அளவில் இருக்கும்.
வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்தில் குரு பகவான் அமர்வு செய்வது வேலைரீதியான மிகச் சிறந்த மாற்றத்தினை ஏற்படுத்துவதாக இருக்கும். வேலையே இல்லாதவர்களுக்குm அவர்களின் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற வேலையானது கிடைக்கப் பெறும்.
உங்களின் முயற்சிக்கேற்ற பலனை நிச்சயம் பெறுவீர்கள். உங்களின் வருமானம், தொழில் வேலை சார்ந்த மிகச் சிறந்த மாற்றங்களுக்கான காலகட்டமாக குரு பெயர்ச்சி உங்களுக்கு இருக்கும்.
கேட்ட இடத்தில் கேட்ட நேரத்தில் உங்களுக்குக் கடன் கிடைக்கப் பெறும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். இதுவரை திருமண காரியங்களில் இழுபறி நீடித்த நிலையில் இனி திருமண காரியங்கள் கைகூடும்.
குழந்தை பாக்கியத்துக்கு எதிர்பார்த்து இருப்போருக்கு நற் செய்தி தேடி வரும். மேலும் வீடு, மனை வாங்குதல் என்பது போன்ற விஷயங்கள் ரீதியான சேமிப்புகளைச் செய்வீர்கள்.
குரு பகவான் 2 ஆம் இடத்தில் இருப்பதால் குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கப் பெறும். குடும்ப உறுப்பினர்களிடையே அன்பு அதிகரிக்கும்.
கணவன்- மனைவி இடையே இருந்துவந்த நீண்ட காலப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும் காலகட்டமாக இது இருக்கும். குரு பகவானின் பார்வை கன்னி ராசி, விருச்சிக ராசி மற்றும் மகர ராசியில் விழுகின்றது. கன்னி ராசியில் விழும் குரு பார்வையால் மேஷ ராசிக்காரர்களுக்கு இருந்த உடல் நலக் கோளாறுகள் சரியாகும்.
வாங்கிய பழைய கடன்களை அடைப்பீர்கள், மேலும் வாக்கு ஸ்தானம் வலுப்பெற்று இருப்பதால் கொடுத்த வாக்கினைக் காப்பாற்றுவீர்கள்.
கடந்த காலங்களில் இருந்துவந்த அவமானங்களுக்குப் பதிலடி கொடுக்கும் காலமாக இருக்கும். குடும்பத்தில் உடன் பிறப்புகளுடன் இருந்துவந்த பிரச்சினைகள் சரியாகும். பிரிந்திருந்த நண்பர்கள் மீண்டும் ஒன்று சேர்வர்.
தொழில்ரீதியாகச் சந்தித்த பின்னடைவில் இருந்து மீண்டு லாபத்தினை நோக்கிப் பயணிப்பீர்கள். வரவிருக்கும் ஒரு வருட காலத்தில் உங்களின் முயற்சி சரியாக இருக்கும்பட்சத்தில் குரு பகவான் உங்களுக்கு வாரி வழங்கத் தயாராக உள்ளார்.