ரிஷபம் குரு பெயர்ச்சி ராசி பலன் 2024-25!

2024 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்குப் பெயர்கிறார். ரிஷப ராசி அன்பர்களே குரு பெயர்ச்சியினைப் பொறுத்தவரைப் பலரும் ரிஷப ராசிக்குப் பாவியான குரு பகவான் எப்படி நன்மை பயப்பார் என்ற குழப்பத்திலேயே இருப்பர்.

ராசியில் குரு பகவான் அமர்வு செய்வதைக் காட்டிலும் பார்வை விழுவதுதான் சிறப்பு என்பது நாம் அறிந்ததே, ரிஷப ராசிக்கு குரு பகவான் வருவது ஒன்று பணத்தினைக் கொடுப்பார்; இல்லையேல் பணத்தினைக் கரைப்பார்.

குரு பகவான் முதலாம் இடத்தில் அமர்வு செய்வதால் கடினமான காலகட்டத்தினை ஏற்படுத்துவார். ஜென்மத்தில் வரும் குரு பகவானால் பல சவால்களை எதிர்கொள்வீர்கள்.

கன்னி ராசியில் குரு பகவானின் பார்வை விழுவதால் பிள்ளைகள் விஷயத்தில் நன்மைகள் ஏற்படும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும்.

கேது பகவான் 5 ஆம் இடத்தில் இருப்பதால் தேவையற்ற பய உணர்வுகள் உங்களின் மனதில் இருக்கும். தொழில் வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கையில் பார்ட்னர்களுடன் சிறு சிறு பிரச்சினைகள், மனக் கசப்புகள் இருந்து கொண்டே இருக்கும்.

மகர ராசியில் குரு பகவானின் பார்வை விழுவதால் உங்களைத் தேடி புகழ் வந்து சேரும்; சமூகத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும்.

உங்களின் தகுதி, திறமை, உழைப்புக்கேற்ற பலன்களையும், பாராட்டினையும் தற்போது பெறுவீர்கள். தந்தை மகன் உறவில் இருந்த மனச் சுணக்கங்கள் சரியாகும்,

முதலீடு செய்கையில் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து முதலீடு செய்யவும். பணம் கொடுக்கல், வாங்கலில் மிகவும் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். அபாயம் தரும் சேமிப்புகளில் முதலீடு செய்வதை அறவே தவிர்த்தல் நல்லது.

குருபகவான் ஜென்மத்தில் இருப்பதால் தேவையற்ற சிந்தனைகள் ஏற்படும். வரவுள்ள ஒரு வருட காலத்தில் பணரீதியான விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை; குரு பகவான் கொடுக்கவும் செய்வார்; அதேபோல் பணத்தினைக் கரைக்கவும் செய்வார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

குரு பகவான்- செவ்வாய் பகவான் சேர்க்கை மங்கல யோகத்தினை ஏற்படுத்தும், குரு- புதன் சேர்க்கை தேவையில்லாத வாக்குவாதத்தினை ஏற்படுத்தும்.

குரு- சனி பகவான் சேர்க்கை தொழில்ரீதியான மேம்பாட்டினைக் கொடுக்கும்.