மீனம் குரு பெயர்ச்சி ராசி பலன் 2024-25!

2024 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்குப் பெயர்கிறார். மீன ராசி அன்பர்களே உங்கள் ராசிக்கு அதிபதியான குரு பகவான் 3 ஆம் இடத்திற்குப் பெயர்ந்து இட அமர்வு செய்கிறார்.

ஏழரைச் சனி ஒருபுறமும், மற்றொருபுறம் முதலாம் இடத்து ராகு பகவானும் குழப்பங்களைக் கொடுக்கின்றனர். இதுவரை நீங்கள் சௌகரியமான சூழ்நிலையில் இருந்துவந்த நிலையில் குரு பகவானின் இடப் பெயர்ச்சியானது தற்போது உங்களுக்குப் பல வகையான அசௌகரியங்களைக் கொடுப்பதாய் இருக்கும்.

பல திடீர் செலவுகள் ஏற்படும், மேலும் பல விஷயங்களில் திடீர் முடிவுகளை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள், மேலும் நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்குச் சாதகமானதாகப் பல நேரங்களிலும் இருக்காது.

எச்சரிக்கை உணர்வுடன் எந்தவொரு முடிவினையும் எடுங்கள். பணம் கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உங்களிடம் இருக்கும் பணம் பல விஷயங்களில் விரயமாகக் காத்திருக்கும்; நீங்கள் அதனை மிகக் கவனத்துடன் இறுக்கிப் பிடித்தல் நல்லது.

சேமிப்பு மட்டுமே உங்களைப் பல நேரங்களிலும் காப்பாற்றும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தொழில் ரீதியாக புதுத் தொழில் துவங்குதல், இருக்கும் தொழிலை அபிவிருத்தி செய்தல் போன்ற விஷயங்கள் செய்ய ஏற்ற காலம் இது கிடையாது.

தெரியாத நபர்களை நம்பி எந்தவொரு விஷயத்திலும் இறங்க வேண்டாம். குடும்பத்தில் யாரும் உங்களைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். சகோதர, சகோதரிகளுக்கு நீங்கள் உதவி செய்யும் நிலைக்கு ஆளாவீர்கள்.

உங்களுக்கு யாராவது உதவுவார்கள் என்று யாரையும் நம்பி இருத்தல் வேண்டாம். வாழ்க்கைத் துணைக்கு உங்கள் மூலம் உதவியும், ஆதரவும் கிடைக்கும்.

பெயருக்கு உங்களை அனைவரும் பாராட்டுவர். உங்கள் தந்தைரீதியாக சொத்துப் பாகப் பிரிவினை ஏற்படும். குருவின் பார்வை 11 ஆம் இடத்தில் விழுவதால் ஏற்கனவே கொடுத்த பணத்தினை வசூல் செய்ய ஏற்ற காலகட்டமாக இந்த குரு பெயர்ச்சி காலம் இருக்கும்.