வெயில் காலம் வந்து விட்டாலே சரும பராமரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் கோடை காலத்தில் தான் வெயிலின் தாக்கத்தினால் சரும பிரச்சனைகள் அதிகம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. சருமத்தை முறையாக பராமரிப்பதில் மிக முக்கியமாக ஒன்று மேக் அப்பை அவ்வபோது முறையாக நீக்குவது தான். இதற்காக கடைகளிலேயே பல நிறுவனங்கள் மேக்கப் ப்ரமூவர்களை விற்பனை செய்கின்றன.
ஆனால் கடைகளில் வாங்கும் மேக்கப் ரிமூவரை விட வீட்டில் நாமே தயாரிக்கும் மேக்கப் ரிமூவர் பயன்படுத்துவது கூடுதல் சிறந்தது. இந்த மேக்கப் ரிமூவர் என்பது நம் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எளிமையாக செய்ய முடியும். இதற்கு அதிக செலவும் ஆகாது. வாருங்கள் எப்படி மேக்கப் ரிமூவர் தயார் செய்வது என்று பார்க்கலாம்.
1. ஒரு கொள்கலனில் மூன்றில் ஒரு பங்கு ஆமணக்கு எண்ணெய் எடுத்துக் கொள்ளவும். இரண்டு பங்கு ஆலிவ் எண்ணெய் எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது இந்த எண்ணெயில் சிறு பகுதியை எடுத்து முகத்தில் நன்றாக தடவி விட வேண்டும். நன்கு மசாஜ் செய்து பிறகு ஒரு நிமிடம் அப்படியே வைத்திருக்கவும்.
ஒரு நிமிடத்திற்குப் பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு சுத்தமான துணியை நனைத்து முகத்தை துடைத்தால் மேக்கப் மொத்தமும் நீக்கப்பட்டு இருக்கும்.
இந்த எண்ணையை வெப்பம் குறைவான பகுதியில் சேமித்து வைத்து பயன்படுத்தலாம்.
2. ஒரு ஸ்பூன் அளவிற்கு ஜோஜோபா ஆயில், ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் எடுத்துக் கொள்ளவும். இவை இரண்டையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
ஒரு காட்டன் பேடில் இதை நனைத்து முகம் முழுவதும் படும்படி துடைக்க வேண்டும்.
இதனை அப்படியே வைத்திருந்து சில நிமிடங்களுக்குப் பிறகு வேறொரு வெள்ளை துணியால் துடைத்து எடுக்கவும்.
எண்ணெய் சருமம் உடையவர்கள் இந்த முறையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
3. நல்ல சுத்தமான தேனை எடுத்துக் கொள்ளவும். முகம் முழுவதும் இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் நல்ல மசாஜ் கொடுக்க வேண்டும்.
இப்பொழுது வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவினால் மேக்கப் நீக்கப்பட்டு இருப்பதோடு சருமமும் மிருதுவாக இருக்கும்.