அட! உங்க குழந்தையை பத்தி உங்களுக்கே தெரியாத சுவாரசியமான சில தகவல்கள்!

தங்களுடைய புன்னகையால் ஒட்டுமொத்த வீட்டையுமே பிரகாசம் அடையச் செய்யக்கூடிய ஆற்றல் குழந்தைகளுக்கு உண்டு. குழந்தை வளர்ப்பு என்பது வெறும் குழந்தைகளை மட்டுமே வளர்க்காமல் பெற்றோர்களாக நாமும் சேர்ந்து வளரக்கூடிய ஒரு அற்புதமான நிகழ்வு. இப்படி குழந்தை வளர்ப்பில் ஈடுபடும் பெற்றோரா நீங்கள் இதோ குழந்தைகளைப் பற்றிய சுவாரசியமான சில தகவல்கள் உங்களுக்காக.

1. குழந்தைகள் தங்களுடைய கற்கும் செயலை வயிற்றில் இருந்தே தொடங்கி விடுவார்கள். 23 வது வாரத்தில் இருந்தே அவர்களுக்கு கேட்கும் திறன் தொடங்கி இருக்கும். எனவே தாயின் குரல் சுற்றி உள்ள ஓசை ஆகியவற்றை கேட்டு கற்க ஆரம்பித்து இருப்பார்கள்.

2. குழந்தைகளுக்கு நீந்தும் திறன் இயற்கையாகவே இருக்கிறது. வளர்ந்த பிறகு பெரியவர்கள் நீச்சல் தெரியாவிட்டால் அதனை கற்றுக் கொள்ள சிரமப்படுவது உண்டு. ஆனால் குழந்தைகளை நீச்சல் குளத்தில் விடும்பொழுது தாமாகவே நீச்சல் அடிக்கக்கூடிய ஆற்றல் அவர்களுக்கு இருக்கிறது.

குழந்தைகளின் காதுகளை சுத்தம் செய்ய நினைக்கிறீர்களா? அதற்கு முன் இவற்றை எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்…!

3. குழந்தைகளுக்கு பேசுவதை விட இசை, தாளம் ஆகியவை எளிதில் புரியும். தாளத்திற்கு ஏற்ப அசையும் உணர்வு தாமாகவே குழந்தைகளுக்கு உண்டாகும்.

4. பெரியவர்களை விட குழந்தைகளுக்கு தான் எலும்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். குழந்தைகள் பிறக்கும் பொழுது 300 எலும்புகளுடன் பிறக்கின்றன. வளர வளர இந்த எலும்புகள் ஒன்றிணைந்து 206 எலும்புகளாக குறைகிறது.

5. குழந்தை பிறக்கும் பொழுதே வீரிட்டு அழுவார்கள். அதன் பிறகு பசி, தூக்கம் என்று பல்வேறு காரணத்திற்காக அவர்கள் அழுகலாம். ஆனால் குழந்தைகள் தொடக்க காலத்தில் ஒரு குறிப்பிட்ட வாரம் வரை அழும் பொழுது அவர்களுக்கு கண்ணீர் சுரக்காது.

6. பிறந்த குழந்தைக்கு பார்வைத்திறன் 20 சென்டிமீட்டரில் இருந்து 30 சென்டிமீட்டர் வரை மட்டுமே இருக்கும். வடிவங்கள், பொருட்கள், நகர்வுகள் ஆகியவை குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் இருந்தால் வெறும் மங்கலாக மட்டுமே தெரியும்.

7. குழந்தைகளின் வயிற்றுப் பகுதி வால்நட் போல மிக சிறிய அளவில் தான் இருக்கும். எனவேதான் சிறிது நேரம் பால் குடித்தாலும் குழந்தைகளுக்கு வயிறு நிரம்பியது போல தோன்றும். ஆனால் சில நிமிடங்களில் மீண்டும் பசி உணர்வு ஏற்படும்.

இதுபோல இன்னும் பல சுவாரசியமான அதிசயங்களை உள்ளடக்கியவர்கள் நம்முடைய குழந்தைகள். குழந்தைகள் வளர்ச்சி என்பது வேகமாக நிகழ்வது போலவே தோன்றும். இப்பொழுது தானே பிறந்தார்கள் எப்படி வளர்ந்தார்கள் என்று ஆச்சரியமாக இருக்கும். எனவே அந்தந்த பருவத்திற்கான அழகிய தருணங்களை ரசிக்க தவறி விடாதீர்கள்.