தொட்டதெல்லாம் துலங்கச் செய்யும் தைப்பூசத்தின் வரலாறும், சிறப்புகளும்…!

தைப்பூசம் தை மாதத்தின் பூச நட்சத்திரத்தன்று உலகெங்கும் உள்ள முருக பக்தர்களால் தைப்பூசத் திருநாளாக கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் வாழ்வில் முருக வழிபாடு என்பது தொன்று தொட்டி இருந்து வருகிறது என்பதை நாம் பல வரலாற்று சான்றுகளின் மூலமாக காண முடிகிறது. தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் இந்த தைப்பூச திருநாள் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். பால்குடம், காவடி என முருகனை வேண்டி வணங்கி பக்தர்கள் திரளாக பழனி உள்ளிட்ட அறுபடை வீடுகளில் கூடி இருப்பதை நாம் காண முடியும்.

தைப்பூசம் கொண்டாட காரணமான வரலாறு:

தேவர்களுக்கு அதிக அளவு தொந்தரவுகளை கொடுத்து வந்த அசுரர்களை அழித்திட தேவர்கள் சிவபெருமானை வேண்டி முறையிட்டார்கள். தேவர்களுக்கு தலைமை தாங்கி அசுரர்களை போர் புரிந்து அழிக்க வேண்டும் அதற்கு வழிநடத்த ஒரு தலைவனை காட்டிடுமாறு சிவபெருமானை வேண்டினார்கள். சிவபெருமானோ கருணைக்கடலானவர். தேவர்களின் வேண்டுகோளின்படி அசரர்களை அழைத்திட அவரது நெற்றிக்கண்ணில் இருந்து தோற்றுவிக்கப்பட்டவர் தான் நம் முருகப்பெருமான்.

சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளாக வெளிவந்து, ஆறு அழகிய குழந்தைகளாக உருவாகி, கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டு பின்பு ஆறுமுகனாக வடிவெடுத்து நின்றவர். பழனி மலையில் ஆண்டி கோலத்தில் இருந்த முருகபெருமானுக்கு பார்வதி தேவி வேல் வழங்கிய நாளாக இந்த தைப்பூசம் குறிப்பிடப்படுகிறது. இந்த வேலினை வைத்து தான் திருச்செந்தூரில் முருகப்பெருமாள் அசுரர்களை அழித்திட்டதாக கூறப்படுகிறது.

எனவேதான் மற்ற அறுவடை வீடுகளை காட்டிலும் பழனி தலத்தில் அதிக அளவு பக்தர்கள் பால்குடம் எடுப்பதையும் காவடி எடுப்பதையும் காணமுடியும். பெரிய நாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்று 10 நாட்கள் கோலாகலமாக இந்த தைப்பூச திருவிழா பழனி மலையில் கொண்டாடப்படுகிறது.

தைப்பூசத்தன்று விரதம் இருக்கும் முறை:

தைப்பூச தினத்தன்று பூச நட்சத்திரம் தொடங்கும் நேரத்தில் நீங்கள் விரதத்தை தொடங்கலாம். வீட்டை சுத்தம் செய்து, நீராடி, நெற்றி நிறைய திருநீறு அணிந்து, விளக்கேற்றி முருகப் பெருமானை வழிபாடு செய்து விரதத்தை தொடங்கலாம். பகல் முழுவதும் விரதம் இருந்து பால் மற்றும் பழத்தை மட்டுமே உண்டு மாலையில் முருகக் கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டு கோவிலில் பிரசாதம் வாங்கி அதனை சாப்பிடலாம்.

வேலைக்குச் செல்பவர்கள் எந்த வேலையாக இருந்தாலும் அதை செய்ய தொடங்குவதற்கு முன்பாக ஓம் சரவணபவ என்று முருகன் நாமத்தை உச்சரித்து அதன் பின் வேலை செய்ய தொடங்கலாம். வீட்டில் இருப்பவர்கள் கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் என முருகனின் துதி பாடி வழிபாடு செய்யலாம்.

தைப்பூசம் முருகப் பெருமானுக்கு மட்டுமல்ல அனைத்து தெய்வங்களுக்கும் உகந்த நாளாகவே குறிப்பிடப்படுகிறது. எனவே இந்த நாளில் இறைவனை வழிபாடு செய்து எந்த வேலையை தொடங்கினாலும் அந்த வேலை நிச்சயம் வெற்றிகரமாக நடக்கும் என்று கூறப்படுகிறது.