மொபைல் போனை கீழேயே வைப்பதில்லையா? கண்டிப்பாக நோமோபோபியா பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

உங்களுடைய போனை எந்நேரமும் கையில் வைத்துக் கொண்டே இருக்கிறீர்களா? அதை அடிக்கடி பரிசோதிப்பது, காலையில் கண்விழித்ததில் தொடங்கி இரவு உறக்கம் வராமல் நீண்ட நேரம் போனையே பார்த்துக் கொண்டிருப்பது. அப்படியே தூங்கினாலும் தூக்கத்தில் திடீரென எழுந்து உங்கள் போனை செக் செய்வது போன்ற பழக்கங்கள் உங்களிடம் இருக்கிறதா? அப்படி என்றால் கண்டிப்பாக இந்த நோமோஃபோபியா பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நோமோஃபோபியா என்பது நோ மொபைல் போன் போபியா என்று அழைக்கப்படுவதன் சுருக்கம் ஆகும். அதாவது மொபைல் போன் உங்களிடம் இல்லை என்றால் உங்களுக்கு ஏற்படும் பயம் அல்லது மனக்கிளர்ச்சியை இது குறிப்பிடுகிறது.

இன்று பலரும் மொபைல் போனுக்கு அடிமையாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. நண்பர்கள் உறவுகள் இல்லாமல் இருக்க முடியாது என்ற காலம் போய் மொபைல் ஃபோன் இல்லாவிட்டால் ஒரு நொடி கூட இருக்க முடியாது என்ற சூழ்நிலைக்கு பலரும் உள்ளாகி விட்டார்கள். நண்பர்களையோ உறவுகளையோ சந்தித்தாலும் சிறிது நேரம் நல விசாரிப்புக்குப் பிறகு பலரும் அவர்களுடைய கைப்பேசியில் மூழ்கி விடுவதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். குறிப்பாக டீன் ஏஜ் பருவத்தினர் 95% இந்த மொபைல் போனை பயன்படுத்த தொடங்கி விட்டார்கள். சாதாரண பயன்பாடு என்பதை தாண்டி மொபைல் ஃபோனையே நேரமும் சார்ந்து இருக்கக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள்.

கேம் விளையாடுதல், சாட் செய்தல், சமூக வலைதள பக்கங்களை பயன்படுத்துதல், பாடல் கேட்டல், வீடியோ பார்த்தல் என அனைத்து விஷயங்களுக்கும் இந்த மொபைல் ஃபோனை மட்டுமே நாடி இருக்கிறார்கள். சில நிமிடங்கள் இணையம் துண்டிக்கப்பட்டாலோ, அல்லது மொபைல் போன் ஹேங் ஆகி வேலை செய்யாவிட்டாலோ, அவர்களுடைய மொபைலில் சார்ஜ் இல்லை என்றாலும் அந்த நேரம் அவர்களுக்கு உண்டாகும் ஒரு விதமான மன அழுத்தம் தான் நோமோபோபியா என்று குறிப்பிடப்படுகிறது. இதற்கான அறிகுறிகள் மற்றும் தீர்வுகள் என்ன என்பதை நாம் பார்க்கலாம்.

அதிகளவு இயர் போன் பயன்படுத்துபவரா நீங்கள் அப்போ இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!

நோமோஃபோபியா அறிகுறிகள்:
  1. பள்ளியிலோ கல்லூரிகளிலோ அல்லது உங்கள் அலுவலகத்திலோ இருக்கும் பொழுது உங்கள் மொபைல் ஃபோனை பயன்படுத்த முடியாது என்ற சூழ்நிலையில் இருந்தீர்கள் என்றால் அந்த சமயத்தில் உங்களுக்கு ஏற்படும் தேவையில்லாத கவலை அல்லது சோர்வு இதன் அறிகுறி ஆகும்.
  2. உங்கள் போனை சார்ஜ் செய்யும் பொழுது இப்பொழுது சிறிது நேரம் உங்களால் போனை பயன்படுத்த முடியாது என்று நினைக்கையில் ஏற்படும் தேவையில்லாத மனக்கிளர்ச்சி இதன் மற்றொரு அறிகுறி ஆகும்.
  3. தூங்க செல்லும் பொழுது, உணவு உண்ணும் பொழுது, ஏன் கழிவறையில் கூட உங்கள் மொபைல் போனை வைத்துக் கொண்டே இருப்பது இதன் முக்கிய அறிகுறி ஆகும்.
  4. சிறிது நேரம் போன் காணாமல் இருந்தாலோ அல்லது சார்ஜில் இருந்தாலோ எதையோ இழந்த நபர் போல் எண்ணுவது இதன் வேறொரு அறிகுறி.
  5. நீண்ட நேரம் உறங்காமல் மொபைல் ஃபோனையே பயன்படுத்துவது. அப்படியே உறங்கினாலும் தூக்கத்திலிருந்து திடீரென விழித்து மொபைல் போனை செக் செய்வது போன்றவை.

இந்த அறிகுறிகள் தென்பட்டால் என்ன செய்யலாம்:

  • உங்கள் மொபைல் போனை வீட்டிலேயே வைத்துவிட்டு அருகில் உள்ள கடைக்குச் செல்வது அல்லது சிறிது நேரம் வாக்கிங் செல்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.
  • ஓய்வு நேரங்களில் மொபைல் ஃபோனை பயன்படுத்துவதை விட எழுதுதல், வரைதல், அல்லது நண்பர்களுடன் சந்தித்து பேசுதல் போன்றவற்றை முயற்சித்து பார்க்கலாம்.
  • உறங்கச் செல்லும் பொழுது எப்பொழுதும் மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டோ அல்லது பிளைட் மோடில் வைத்து விட்டோ தூங்கலாம். ஒருவேளை உங்களுக்கு அலாரம் தேவைப்பட்டால் மொபைல் போனில் அலாரம் வைத்து விட்டு தலைக்கு அருகில் வைக்காமல் சிறிது தொலைவில் வைத்துவிட்டு தூங்கலாம்.
  • தூங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னால் மொபைல் போன் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். நிலைமை நீடித்தால் நல்ல மருத்துவரை அணுகி தெரப்பி மேற்கொள்வது நல்லது.

எந்த ஒரு கருவியும் அதன் பயன்பாடும் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் இருந்தால் எந்த பாதிப்பும் இல்லை. நிலைமை மாறி நாம் அதற்கு அடிமையாகும் பொழுது நம்முடைய மனநலம் உடல்நலம் என அனைத்துமே பாதிக்கப்படுகிறது. எனவே கவனமாய் தொலைத்தொடர்பு சாதனங்களை கையாள்வோம்.