குழந்தை பிறந்து ஆறு மாதம் வரை கட்டாயம் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பது மருத்துவ நிபுணர்களின் அறிவுரை. ஆறு மாதத்திற்கு பிறகு திட உணவுகளை கொடுக்க தொடங்கினாலும் குறைந்தது இரண்டு வயது வரையிலாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். சிலருக்கு வேலை நிமித்தம் காரணமாகவோ அல்லது வேறு சில காரணங்களுக்காகவோ குழந்தைக்கு தாய்ப்பால் வழங்குவதில் சிக்கல் இருக்கலாம். தாய்ப்பால் வழங்கலாமா? வேண்டாமா? என்று குழப்பத்தில் இருப்பவர்கள் என்றால் ஒரு முறை தாய்ப்பால் வழங்குவதால் ஏற்படும் நன்மைகளையும் அதனால் குழந்தையின் உடல் வளர்ச்சிக்கு உண்டாகும் நல்ல மாற்றங்களையும் அறிந்து கொண்டால் நல்லது. வாருங்கள் தாய்ப்பால் வழங்குவதால் தாய்க்கும் சேய்க்கும் உண்டாகும் நன்மைகளை குறித்து அறிந்து கொள்வோம்.
தாய்ப்பால் வழங்குவதால் குழந்தைக்கு ஏற்படும் நன்மைகள்:
குழந்தைக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது:
குழந்தைக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் தாய்ப்பால் மூலம் தான் கிடைக்கிறது. தாய்ப்பாலுக்கு பதிலாக மருத்துவர்கள் ஃபார்முலா மில்க் பரிந்துரை செய்தாலும் தாய்ப்பாலுக்கு நிகரான ஊட்டச்சத்துக்கள் அதில் கிடைப்பதில்லை. வைட்டமின் டி தவிர அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் தாய்ப்பாலில் நிறைந்துள்ளதால் தான் தாய்ப்பாலுடன் வைட்டமின் டி சொட்டு மருந்து கொடுப்பதற்கு பரிந்துரைக்கப்படுகிறது.
தாய்ப்பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்துள்ளது:
பொதுவாகவே தாய்ப்பால் ஆன்டிபாடிகள் நிறைந்ததாகும். பச்சிளம் குழந்தைகள் எளிதில் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களால் நோய் தொற்றுக்கு ஆளாக நேரிடும். தாய்ப்பாலில் இருக்கக்கூடிய ஆன்டிபாடிகள் வைரஸ் மற்றும் பாக்டீரியாவை எதிர்த்து போராடும் ஆற்றலை குழந்தைக்கு வழங்குகிறது.
தாய்ப்பால் குழந்தைகளை நோய் ஆபத்திலிருந்து காக்கிறது:
காதுகளில் ஏற்படக்கூடிய தொற்று, சுவாசப் பாதையில் ஏற்படக்கூடிய தொற்று, சளி மற்றும் அதனால் ஏற்படக்கூடிய தொற்றுகள், குடல் பகுதியில் உண்டாக கூடிய தொற்றுகள் ஆகியவற்றில் இருந்து காக்கிறது. நீரிழிவு நோய், அலர்ஜி ஏற்படாமல் தடுக்கிறது. குடல் செல்களில் ஏற்படக்கூடிய பாதிப்பிலிருந்து காக்கிறது. மேலும் குழந்தை பருவத்தில் ஏற்படக்கூடிய லுகேமியா நோயிலிருந்து தடுக்கிறது.
குழந்தையின் உடல் எடையை அதிகரிக்கிறது:
குழந்தைகளுக்கு உடல் எடை எப்பொழுதும் ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க வேண்டும். அதற்கு தாய்ப்பால் மட்டுமே சிறந்த வழியாகும். தாய்ப்பால் அந்தந்த பருவத்திற்கான வளர்ச்சியை மிகச்சரியாக வழங்குவதில் உதவி புரிகிறது. மேலும் குழந்தைகளின் வயதிற்கு ஏற்ற உடல் எடை வளர்ச்சியிலும் மிகப்பெரிய பங்காற்றுகிறது.
குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கிறது:
ஃபார்முலா மில்க் கொடுத்து வளர்க்கும் குழந்தைகளை விட தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தாய்ப்பால் வழங்கும்போது தாய்க்கும் சேர்க்கும் இடையிலான உடல் நெருக்கம், தொடுதல் மற்றும் கண்களை நேராக பார்த்தல் போன்ற காரணங்களால் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி அதிகரிக்கிறது.
தாய்ப்பால் வழங்குவதால் தாய்க்கு உண்டாக கூடிய நன்மைகள்:
உடல் எடை குறைதல்:
குழந்தைக்கு தாய்ப்பால் வழங்கும் தாய்மார்களுக்கு உடலில் உள்ள கலோரிகள் அதிக அளவு எரிக்கப்பட்டு தாய்மாரின் உடல் எடை குறையும் வாய்ப்பு அதிக அளவில் இருக்கிறது.
கர்ப்பப்பை பழைய நிலைக்கு கொண்டு வருகிறது:
கர்ப்ப காலத்தில் ஒரு தாய்மாரின் கர்ப்பப்பை ஒரு குழந்தையை தாங்கும் அளவிற்கு விரிந்து கொடுக்கிறது. பிரசவத்திற்கு பிறகு கர்ப்பப்பை தன்னுடைய பழைய நிலைக்கு அடைய வேண்டும் இந்த செயல்பாட்டில் ஆக்ஸிடோன் என்னும் ஹார்மோன் மிகப்பெரிய பங்காற்றுகிறது. இந்த ஹார்மோன் தாய்ப்பால் வழங்கும் பொழுது அதிகரிக்கிறது இதனால் கர்ப்பப்பை பழைய நிலையை அடைய முடிகிறது.
உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை காக்கிறது:
குழந்தை பிறப்பிற்கு பிறகு உண்டாகும் மன அழுத்தம், உயர் இரத்த அழுத்தம், டைப் 2 சர்க்கரை வியாதி, மாதவிடாய் பிரச்சனைகள் போன்ற பல பிரச்சனைகளுக்கான ஆபத்து நிலையை தாய்ப்பால் வழங்குதல் வெகுவாக குறைக்கிறது.