கண்ணாடி அனைத்து வீடுகளிலும் கட்டாயம் இருக்கக்கூடிய ஒரு மிக முக்கியமான ஒரு பொருளாகும். முகம் பார்க்கும் கண்ணாடி என்பதை தாண்டி அழகு சாதன பொருளாகவும் இது கருதப்படுகிறது. இந்த கண்ணாடிக்கு வீட்டில் நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல்களை பிரதிபலிக்கும் ஆற்றலும் உண்டு என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?
நம் வீட்டில் உள்ளோர் நோய்வாய் படாமல் ஆரோக்கியமாக இருக்கவும், செல்வ வளம் பெருகவும் வீட்டில் கண்ணாடி மாற்ற வேண்டிய திசையும் இடமும் முக்கிய பங்கு வகிக்கிறது. கண்ணாடி மாட்டும் வாஸ்து அறிந்து அதை முறையாக பின்பற்றினால் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.
வீட்டின் நுழைவாயிலுக்கு எதிர்ப்புறம் ஒரு பெரிய கண்ணாடியை மாட்டி வைக்க வேண்டும். அதாவது வீட்டிற்குள் வரும் நபர் உள்ளே நுழையும் பொழுதே அந்த கண்ணாடி படும் படி மாட்டி வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் வெளியிலிருந்து வீட்டிற்குள் வரும் நபரின் தீய எண்ணங்களோ அல்லது கண் திருஷ்டியோ வீட்டில் உள்ள நபரை எந்த விதத்திலும் பாதிக்காது.
அதேபோல் பூஜை அறையின் எதிர்ப்புறத்திலும் ஒரு கண்ணாடி மாட்டி வைக்க வேண்டும். கோவில்களில் கருவறைக்கு எதிர்ப்புறத்தில் கண்ணாடி மாட்டியிருப்பதை நாம் பார்த்திருப்போம் அது போல் தான். இது பூஜை அறையில் இருந்து வெளிப்படும் நேர்மறை ஆற்றலை வீடு முழுவதும் பிரதிபலித்து வீட்டை எப்பொழுதும் நேர்மறையாக வைத்திருக்க உதவும்.
வீட்டின் படுக்கை அறையில் கண்ணாடி வைக்க கூடாது. ஒருவேளை அவ்வாறு கண்ணாடி இருந்தால் அது படுக்கையை நோக்கி இருக்கும் படி கட்டாயம் இருக்கக் கூடாது. ஒருவேளை நீங்கள் அவ்வாறு கண்ணாடி வைத்து விட்டீர்கள் அதை மாற்ற இயலவில்லை என்றால் உறங்கும் பொழுது அந்த கண்ணாடியை ஒரு திரை கொண்டு மூடி விடுங்கள்.
அதேபோல் உணவு உண்ணும் இடத்திலும் கண்ணாடி அமைக்கக்கூடாது. உணவு உண்ணும் அறையிலோ அல்லது டைனிங் டேபிளிலிலோ கண்ணாடி பதித்து இருக்கக் கூடாது.
கண்ணாடி என்பது நம்மை நாமே அழகாய் மாற்றிக்கொள்ள உதவுவது மட்டுமல்ல நம் வீட்டில் உள்ள நேர்மறை ஆற்றலையும் மாற்றும் சக்தி உடைய ஒரு பொருளாகும். இவற்றை எல்லாம் முறையாக பின்பற்றி வாருங்கள் உங்கள் வீட்டில் நீங்களே மாற்றத்தை உணருவீர்கள்.