வருகின்ற மகளிர் தினத்திற்கு உங்கள் வாழ்வில் முக்கியத்துவம் நிறைந்த பெண்ணிற்கு என்ன பரிசு கொடுக்கப் போகிறீர்கள்?

சர்வதேச மகளிர் தினம் மார்ச் மாதத்தின் எட்டாம் தேதி உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த மகளிர் தினம் பல நாடுகளில் தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களின் முன்னேற்றம், பெண் கல்வி குறித்த விழிப்புணர்வு, பெண் தொழிலாளர்களின் நலன் என பல்வேறு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த மகளிர் தினம் ஆண்டுதோறும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த மகளிர் தினம் கொண்டாடும் வேளையில் உங்கள் வீட்டில் உள்ள பெண்களையோ அல்லது உங்கள் வாழ்வில் உங்களுக்கு முக்கிய அங்கம் வகிக்கும் பெண்களையோ சிறப்பிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள், அவர்களுக்கு ஏதேனும் பரிசு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள், ஆனால் என்ன கொடுப்பது என்று தெரியவில்லை என்றால் இந்த கட்டுரையை படித்து பாருங்கள் உங்களுக்கு நிச்சயம் ஒரு நல்ல யோசனை கிடைக்கும்.

மகளிர் தினத்தன்று உங்களின் தாய், சகோதரி, மனைவி, காதலி, தோழி என யாருக்கு பரிசு கொடுக்க விரும்புகிறீர்களோ அவர்கள் உங்கள் வாழ்வில் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதையும் அவர்கள் மீது உங்களுக்கு இருக்கும் அன்பு மற்றும் அக்கறை குறித்தும் ஒரு மடலாக எழுதி அதை பரிசாக கொடுக்கலாம். இதைவிட சிறந்த பரிசு எதுவும் அவர்களுக்கு இருக்காது. வார்த்தைகளாக கூறுவதை விட அதனை எழுதி நீங்கள் பரிசாக கொடுத்தால் அதனை வாழ்நாள் முழுவதும் பொக்கிஷமாக அவர்கள் கருதுவார்கள்.

இல்லையே அவர்களை ஒரு அழகிய சுற்றுலா பகுதிக்கு அழைத்துச் செல்லலாம். யார் தான் விடுமுறையை விரும்ப மாட்டார்கள். உங்களுக்கு பிடித்த நபருக்கு மகளிர் தின பரிசாக ஒரு வார விடுமுறையை பரிசளியுங்கள். அவருக்கு பிடித்த விதமாக மலைப்பகுதிகளுக்கோ இல்லை கடற்கரை சார்ந்த பகுதிக்கோ சுற்றுலா போல அழைத்துச் சென்று வாருங்கள். நிச்சயம் இது அவர்களுக்கு சிறந்த பரிசாக இருக்கும்.

உங்களுக்கு பிடித்தமான நபர்களுடன் நீங்கள் செலவிட்ட மகிழ்ச்சியான தருணங்களை நினைவூட்டும் விதமான புகைப்படங்களை ஒரு தொகுப்பாக உருவாக்கி அதனை பரிசாக கொடுக்கலாம். புகைப்படமாக மட்டும் இல்லாமல் அந்த தருணங்கள் குறித்த உங்கள் நினைவுகளையும் அதில் எழுதி கொடுக்கலாம்.

உங்கள் வாழ்வின் முக்கியத்துவம் நிறைந்த நபரை ஸ்பா, அழகு நிலையம் போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்காக அவர்களை நேரம் ஒதுக்கும் படி செய்யலாம். பிடித்த உணவகத்திற்கு அழைத்து செல்லலாம். திரைப்படம், ஷாப்பிங் என அவர்களுக்கு எதில் அதிக ஈடுபாடோ அதை நிறைவேற்ற முயற்சி செய்யலாம்.

அணிகலன்கள், அழகு சாதன பொருட்கள், உடைகள் என்று உங்களுக்கு எது தோன்றுகிறதோ அதை பரிசாக கொடுக்கலாம். ஆனால் அதைவிட நல்ல நினைவுகளை பரிசாக கொடுத்தால் அது என்றும் அவர்களுக்கு மறக்காமல் இருக்கும்.