குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் தயார் செய்வது என்பது பல தாய்மார்களுக்கும் ஒரு மிகப்பெரிய சவாலாகவே இருக்கிறது. இந்த தினசரி சவாலை சமாளிப்பது என்பது எளிதான வேலை அல்ல. குழந்தைகளுக்கு கொடுத்து விடும் லஞ்ச் பாக்ஸ் அவர்களுக்கு பிடித்தமான உணவாக இருந்தால்தான் வீட்டிற்கு வரும் பொழுது அது காலியாக வரும். ஆனால் குழந்தைகளுக்கு பிடித்தமான அந்த உணவானது குழந்தைகளுக்கு தேவையான ஆற்றலை நிறைவு செய்வதாக இருக்க வேண்டுமே தவிர அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு தரக்கூடிய உணவு வகைகளாக இருக்கவே கூடாது.
சில உணவுகள் குழந்தைகள் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கக்கூடும். அது போன்ற குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் சில உணவு வகைகளை இப்பொழுது பார்க்கலாம் இவற்றை ஒருபோதும் உங்கள் குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸில் வைத்து அனுப்பாதீர்கள்.
1. இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்:
உடனடியாக இரண்டே நிமிடத்தில் செய்து முடிக்கக்கூடிய இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் ஒருபோதும் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் வைத்து கொடுக்காதீர்கள். நூடுல்ஸ் என்று மட்டுமல்ல இன்ஸ்டன்ட் ஆக செய்து கொடுக்கக்கூடிய எந்த விதமான உணவு வகைகளும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்.
2. சூடு செய்யப்பட்ட உணவு:
முதல் நாள் இரவே சமைத்த உணவுகளை ஃப்ரிட்ஜில் வைத்து அதை சூடு செய்து மறுநாள் குழந்தைகளுக்கு கொடுப்பது என்பது செய்யக்கூடாத ஒன்று. குழந்தைகளுக்கான லஞ்ச் பாக்ஸில் எப்பொழுதும் பழைய உணவை சூடு செய்து கொடுக்காதீர்கள்.
3. அதிகமான எண்ணெயில் வருத்த பொரித்த உணவுகள்:
பிரெஞ்சு ப்ரைஸ், சிப்ஸ், சிக்கன் 65, சிக்கன் நக்கட்ஸ் என எண்ணெயில் அதிகம் பொறித்த உணவுகளை குழந்தைக்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிபியாக கொடுத்து விடக்கூடாது. எண்ணெயில் பொரித்த உணவுகள் குழந்தையின் உடல் நலத்தை பாதிக்கும். எனவே அந்த மாதிரியான உணவுகளை தவிர்க்கலாம்.
4. பதப்படுத்தப்பட்ட உணவுகள்:
பதப்படுத்தப்பட்ட இறைச்சி, நொறுக்கு தீனி மற்றும் உணவு வகைகளை குழந்தைக்கு லஞ்ச் பாக்ஸில் வைத்து கொடுக்கக் கூடாது. இது போன்ற உணவுகள் குழந்தைகள் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும் எனவே பதப்படுத்தப்பட்ட உணவுகளை முற்றிலும் தவிர்த்திடுங்கள்.
5. மயோனைஸ்:
மயோனைஸ் சேர்க்கப்பட்ட சாலடுகள், சப்பாத்தி ரோல்கள் போன்றவற்றை மதிய உணவிற்கு கொடுக்க வேண்டாம். நேரம் ஆக ஆக இது போன்ற பொருட்களின் தன்மை மாறக்கூடும். எனவே மயோனைஸ் சேர்த்து கொடுப்பதை தவிர்க்கவும்.