உங்க குழந்தைக்கு பிஸ்கட் கொடுக்குறீங்களா? அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க…!

குழந்தைகளுக்கு ஆறு மாதம் நிறைவடைந்து உணவு கொடுக்க தொடங்கும் வேளையில் சில பெற்றோர்கள் குழந்தைகள் வாயில் வைத்து கடித்து உண்பதற்கு ஏதுவாக இருக்கும் என்று பிஸ்கட்டை கொடுக்க தொடங்குவார்கள். சில நேரங்களில் பசியால் அழும் குழந்தைக்கு சீக்கிரம் பசியை ஆற்ற உடனடி தீர்வாக இந்த பிஸ்கட்டை நாடுவார்கள். பிஸ்கட்டில் பால் அல்லது தண்ணீர் ஊற்றி சிறு கரண்டியால் குழந்தைக்கு ஊட்டி விட்டால் சற்று பசியாறுவார்கள் என்று நினைப்பதுண்டு.

குழந்தைகளும் பிஸ்கட்டில் உள்ள இனிப்பு சுவை மற்றும் சாப்பிட எதுவாக இருத்தல் போன்ற காரணங்களுக்காக இதனை ரசித்து உண்பார்கள். என்றாவது இந்த பிஸ்கட்டை குழந்தைக்கு கொடுக்கலாமா? பிஸ்கட் கொடுப்பதால் குழந்தைக்கு ஏதேனும் தீங்கு நேரிடுமா? இந்த பிஸ்கட்டில் என்னென்ன கலக்கப்பட்டிருக்கிறது? என்பதை நீங்கள் யோசித்து இருக்கிறீர்களா? இல்லை என்றால் இதனை படித்து பாருங்கள்.

உங்கள் குழந்தைகளின் ஞாபகத் திறனை அதிகரிக்க.. இந்த டிப்ஸ்களை ஃபாலோ செய்து பாருங்கள்!

கடைகளில் வண்ண வண்ண நிறங்களில் பல்வேறு நிறுவனங்கள் பல வகையான சுவைகளில் பிஸ்கட் தயாரித்து அதனை சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றன. இந்த பிஸ்கட்டின் மூலப்பொருள் மைதா. மேலும் இதில் சர்க்கரை, டால்டா சீக்கிரம் கெடாமல் இருப்பதற்கான ப்ரிசர்வேட்டிவ்ஸ், திட பால் பொருள், வாசனை மற்றும் சுவைக்கான சில ஃபிளேவர் என பல்வேறு பொருட்கள் கலந்து பிஸ்கட்கள் தயாரிக்கப்படுகிறது.

பிஸ்கட்டில் கலந்துள்ள பொருட்களும் அதனால் விளையும் தீமைகளும்:

1. மைதா :

மைதா எந்த விதமான ஊட்டச்சத்துக்களோ அல்லது நார்ச்சத்தோ இல்லாத ஒரு உணவு பொருள். இது செரிமானத்தை மிகவும் கடினமாக்கும். மலச்சிக்கலை உண்டாக்கிவிடும். புற்று நோயை உண்டாக்கக்கூடிய கூறுகள் இதில் உண்டு. மைதாவில் எந்தவிதமான ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் இருந்தாலும் இதில் கலோரிகள் மிக அதிகமான அளவில் உள்ளது எனவே சிறு வயதிலேயே உடல் பருமனை உண்டாக்கி விடும்.

2. டால்டா:

டால்டா அல்லது வெஜிடபிள் ஃபாட் என்று அழைக்கப்படும் இந்த மூலப்பொருள் அதிக அளவில் பிஸ்கட்களில் சேர்க்கப்படுகிறது. இது மிகச் சிறிய வயதிலேயே கொழுப்பு சம்பந்தப்பட்ட நோய்களை உண்டாக்கி விடும். இதய நோய் ஏற்படுவதற்கும் வாய்ப்புக்களை அதிகரித்து விடும்.

3. சர்க்கரை:

சர்க்கரையில் அதிக அளவு சல்பர் உள்ளது. இது குழந்தைகளின் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய ஒன்றாகும். சர்க்கரையை குழந்தைக்கு அளவுக்கு அதிகமாக எந்த வடிவில் கொடுத்தாலும் அது குழந்தைகளை விரைவில் அந்த சுவைக்கு அடிமையாக்கி விடும் மேலும் குழந்தைகளின் உடல் பருமனை அதிகரிக்க செய்வதோடு அவர்களின் தூக்கத்தையும் குறைக்கும்.

4. திட பால் பொருள்:

ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பால் அல்லது ஃபார்முலா பால் தவிர வேறு எந்த விதமான பாலையும் கொடுக்கக் கூடாது. இதில் உள்ள மூலக்கூறுகள் குழந்தைக்கு செரிமான பிரச்சனையை உண்டாக்கிவிடும். மேலும் சிறுநீரகத்தை பாதிக்கும் ஆபத்தும் ஏற்படலாம்.

5. சுவையூட்டி:

பிஸ்கட் போன்ற பொருட்களில் சுவைக்காக சில பொருட்களை சேர்ப்பது உண்டு. இந்த விதமான சுவையூட்டிகள் குழந்தைகளுக்கு பிடித்து விட்டால் மீண்டும் மீண்டும் அதே பொருட்களை கேட்க தொடங்கி விடுவார்கள். இது குழந்தைகளுக்கு நல்லதல்ல. மேலும் அவர்களை ஹைப்பர் ஆக்டிவாக மாற்றும்.

6. ப்ரிசர்வேட்டிவ்ஸ் :

பிஸ்கட் போன்ற பாக்கெட்களில் விற்கப்படும் பொருட்கள் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருப்பதற்காக அதில் பிரிசர்வேட்டிவ் சேர்க்கப்படுவது உண்டு. இது போன்ற வேதிப்பொருட்கள் கலந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது. இது குழந்தைகளிடம் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து அவர்களை பலவீனமானவர்களாக மாற்றிவிடும்.