உங்க வீட்டு பூஜை அறையில் இந்த விஷயங்களை மறக்காம கடைபிடியுங்கள்…!

வீட்டின் முக்கியமான இடமாக கருதப்படும் பூஜை அறையில் சில விஷயங்களை நாம் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு கடைப்பிடித்தால் தான் வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரம் மேம்படுவதோடு வீட்டில் எப்பொழுதும் நேர்மறை எண்ணங்கள் நிறைந்து இருக்கும். இதற்காக பெரிய மெனக்கெடல்கள் எதுவும் தேவையில்லை. எளிமையான சில விஷயங்களை பின்பற்றினால் போதும் வாருங்கள் அவை என்னென்ன என்று பார்க்கலாம்.

1. பூஜை அறை எப்பொழுதும் நறுமணம் நிறைந்ததாக இருக்க வேண்டும். பூஜை அறையில் எந்தவிதமான துர்நாற்றமோ அல்லது அழுகிய பூக்களின் மணமோ இருக்கக் கூடாது. எப்பொழுதும் வாசனையாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக தினமும் சாம்பிராணி போடுவதை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.

2. பூஜை அறையில் தினமும் விளக்கேற்றுவதை வழக்கமாக்கிக் கொள்ளவும். காலை அல்லது மாலையிலோ அல்லது இரு வேளையிலுமோ விளக்கேற்ற வேண்டும். மண் விளக்கு, பித்தளை விளக்கு, வெள்ளி விளக்கு என எந்த விளக்காக இருந்தாலும் பரவாயில்லை தினமும் விளக்கேற்ற தவறக் கூடாது.

3. உடைந்த விளக்கை ஏற்றுவது அல்லது பாசி பிடித்த விளக்கு ஏற்றுவது போன்றவை கூடாது. விளக்கை நன்கு சுத்தம் செய்து ஏற்ற வேண்டும். இதற்காக தினமும் விளக்கை கழுவ வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் எப்பொழுதும் பளிச்சென்று இருக்கும்படி அவ்வப்போது சுத்தம் செய்து விளக்கேற்றி வையுங்கள்.

4. பூஜை அறையில் இருந்து காய்ந்த பூக்களையோ பூஜைக்கு பயன்படுத்திய பொருட்களின் குப்பைகளையும் அவ்வப்போது நீக்கிவிட வேண்டும். அதனை பூஜை அறையிலேயே ஒரு பையில் போட்டு சேகரித்து வைப்பதை தவிர்க்கலாம்.

5. பூஜை அறையில் எப்பொழுதும் வெளிச்சம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய விளக்காவது எப்பொழுதும் எரிய வேண்டும். பகல் பொழுதில் சூரிய வெளிச்சம் போதுமானது. ஆனால் இரவில் ஏதேனும் ஒரு சிறிய விளக்கை போட்டு வைத்து விடுங்கள்.

இவற்றை எல்லாம் தவறாமல் பின்பற்றுங்கள் உங்கள் பூஜை நிச்சயம் முழுமையடையும்.