பாலூட்டும் தாய்மார்கள் இதையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்…!

குழந்தை பிறந்ததிலிருந்து ஆறு மாதம் வரை தாய்ப்பாலை மட்டுமே உணவாக எடுத்துக் கொள்வதன் மூலம் அதன் வளர்ச்சிக்கு தேவையான முழு ஊட்டச்சத்துக்களையும் பெறுகிறது. இந்த தாய்ப்பால் கொடுக்கும் பல பெண்களுக்கும் பல்வேறு விதமான சந்தேகங்களும் குழப்பங்களும் ஏற்படலாம். குழந்தைக்கு போதுமான பால் நம்மிடம் இருக்கிறதா? குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறதா? தாய்ப்பாலை எவ்வாறு அதிகரிப்பது? தாய்ப்பால் சுரப்பு திடீரென ஏன் குறைகிறது? என்று பல்வேறு சந்தேகங்கள் தோன்றலாம் அது குறித்து இப்பொழுது நாம் பார்க்கலாம்.

குழந்தைக்கு ஊட்டச்சத்து கிடைக்கும் அளவிற்கு பால் குடிக்கிறதா என்பதை அறிந்து கொள்ள:

  • குழந்தைக்கு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை பால் புகட்ட வேண்டும். இரண்டு மணி நேரத்திற்கு இடையில் குழந்தை பசி எடுத்து அழுதாலும் அந்த சமயத்தில் பால் புகட்ட வேண்டும். 24 மணி நேரத்தில் குறைந்தது 8ல் இருந்து 16 தடவையாவது குழந்தைக்கு பால் புகட்ட வேண்டியது அவசியம். அப்பொழுது தான் குழந்தைக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்கிறது.
  • ஒரு நாளைக்கு குறைந்தது ஏழு டயப்பர்கள் ஆவது குழந்தைக்கு மாற்ற வேண்டும். குழந்தை எத்தனை முறை சிறுநீர் மலம் கழிக்கிறது என்பதை கணக்கில் வைத்து கொள்ளுங்கள்.
  • குழந்தைகள் சில நேரம் பாலை பருகாமல் காற்றை மட்டுமே உட்கொள்ள நேரிடும். எனவே நன்றாக உற்று கவனித்தால் தொண்டையின் வழியாக குழந்தை பாலை விழுங்குவதை உணர முடியும். லேசாக தொண்டையில் கை வைத்து பார்த்தால் குழந்தை பாலை விழுங்குகிறதா இல்லையா என்பதை நீங்கள் உணரலாம்.
  • குழந்தைக்கு பால் புகட்டிய பிறகு உங்கள் மார்பகம் லேசாக இருப்பது போல் உணர்ந்திருந்தால் குழந்தை பாலை பருகி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
  • குழந்தை பிறக்கும் பொழுது இருக்கும் எடையை விட ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் அவர்களுக்கு எடை இழப்பு ஏற்படும். ஆனால் முறையாக தாய்ப்பால் பருகினால் பத்திலிருந்து 14 நாட்களுக்குள் அவர்கள் இழந்த எடையே மீண்டும் பெற்றிருப்பார்கள்.

தாய்ப்பால் சுரப்பு குறையாமல் இருக்க இதையெல்லாம் கவனத்தில் கொள்ளுங்கள்:

  • குழந்தைக்கு ஒருமுறைக்கு 20 நிமிடங்களாவது தாய்ப்பால் புகட்டுங்கள். இரண்டு புறமும் மாறி மாறி குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுங்கள். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க கொடுக்க தான் பால் நன்கு சுரக்கும்.
  • தாய்ப்பால் குடித்த பிறகு குழந்தையை அணைத்தபடி தோளில் போட்டு 20 நிமிடங்கள் ஆவது முதுகு பகுதியில் தடவிக் கொடுங்கள். குழந்தைக்கு தாயின் ஸ்பரிசமும் அனைத்தும் மிகவும் முக்கியம்.
  • தாய்ப்பால் கொடுக்கும் பொழுது குழந்தையை முறையாக அனைத்து பிடித்து இருக்கிறீர்களா? குழந்தை சரியாக தாய்ப்பால் குடிக்கிறதா என்பதை கவனித்துக் கொள்ளுங்கள்.
  • தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகாமல் இருக்கும் காரியங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.
  • குழந்தை தூங்கும் நேரத்தில் உங்களுக்குப் பிடித்தமான செயல்களில் ஈடுபடுவதையோ அல்லது உறங்குவதையோ வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • மருத்துவரின் அனுமதி இல்லாமல் வேறு எந்த மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளாதீர்கள்.