இன்றைய குழந்தைகளின் வாழ்க்கை முறை பெரும்பாலும் தொழில் நுட்ப சாதனங்களை சார்ந்து இருக்கும் படி அமைந்துள்ளது. முக்கியமான நபர்களின் தொலைபேசி எண்களை நினைவு வைத்துக் கொள்ளுதல், ஒரு சிறிய கணக்கினை கூட்டி சரிபார்த்தல், முக்கிய செய்திகளை, நாட்களை ஞாபகம் வைத்திருத்தல் என அனைத்திற்கும் அவர்கள் தொழில்நுட்ப சாதனங்களை மட்டுமே நம்பி இருக்கிறார்கள். இன்று நடந்ததை நாளை கேட்டால் மறந்து விட்டேன் என்று சாதாரணமாக கூறி கடந்து விடுகிறார்கள். இவ்வாறு இல்லாமல் உங்கள் குழந்தைகளின் ஞாபகத்திறனை அதிகரிக்கச் செய்ய சில டிப்ஸ்களை பாலோ செய்தால் போதும்.
ஏனென்றால் ஞாபகத்திறன் என்பது வெறும் படிப்பு சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. அது முக்கியமான வாழ்க்கைத் திறன் ஆகும். வாருங்கள் குழந்தைகளின் ஞாபகத்திறனை மேம்படுத்த எளிய 5 டிப்ஸ்களை பார்க்கலாம்.
1. ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கம். உண்ணும் உணவு ஆரோக்கியம் நிறைந்ததாக இருப்பது மிக முக்கியம். மேலும் உணவில் அதிக அளவு ஒமேகா த்ரீ இருக்கும்படி பார்த்துக் கொள்ளுதல் நல்லது. மூளையில் செயல்பாட்டை அதிகரிக்க கூடிய உணவுகளை உண்டால் உடல் நலன் மட்டுமின்றி மூளையின் வளர்ச்சி சிறப்பாக அமைந்து ஞாபக சக்தி அதிகரிக்கும்.
2. மூளைத்திறனை அதிகரிக்க கூடிய விளையாட்டுகளில் ஈடுபடுதல். புதிர்களை தீர்த்தல் போன்ற ஞாபக சக்தியை அதிகரிக்கும் விளையாட்டுகளில் ஈடுபடலாம். மொபைலில் வீடியோ கேமாக இல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்தோ அல்லது தனியாகவோ நேரடியாக விளையாடும் விளையாட்டாக இருக்க வேண்டும். இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடும் பொழுது மூளை சிறப்பாக செயல்படும் ஞாபகத்திறன் மேம்படும்.
3. மொபைல், கணினி, தொலைக்காட்சி ஆகியவற்றை அதிக நேரம் பயன்படுத்தாமல் இருத்தல். திரை நேரத்தை குறைத்தாலே போதும் மொபைலில் முக்கியமாக கற்க வேண்டியவை ஏதும் இருந்தால் கூடுமானவரை இன்ட்ராக்டிவ் ஆப்பை பயன்படுத்தி கற்கலாம். கலந்துரையாடும் வகையில் இல்லாமல் வெறும் திரையை மட்டும் பார்க்கும்படி கற்றல் இருந்தால் நிச்சயம் கவனம் முழுமையாய் அதில் இராது. கற்பதும் உடனடியாக மறந்து விட வாய்ப்பு உண்டு. தினமும் நிறைய புத்தகங்களை வாசிக்க கொடுக்கலாம்.
4. நல்ல உறக்கம் ஞாபகத்திறனை அதிகரிக்க கூடிய மிக முக்கியமான விஷயம். தினமும் எட்டிலிருந்து பத்து மணி நேரம் வரை நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் ஈடுபட வேண்டும். நன்கு உறங்கி எழுந்தால் தான் மூளை புத்துணர்ச்சியோடு அடுத்த நாளுக்காக செயல்பட முடியும். எனவே தூக்கம் மிக அத்தியாவசியமான ஒன்றாகும்.
5. உடல் இயக்க செயல்பாடுகளில் அதிக அளவு ஈடுபடுதல், நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, யோகா, நீச்சல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடலாம். இதனால் உடல் மட்டும் இன்றி மனமும் புத்துணர்ச்சி அடைந்து மூளை நன்றாக செயல்பட உதவி புரிகிறது.